எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்வோரை இலங்கை மீனவர்கள் தாக்க திட்டம் - தமிழக கடற்படை அதிகாரி தகவல்
எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதால் உஷாராக இருக்க வேண்டும் என்று தமிழக கடற்படை அதிகாரி கூறினார்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமில் சென்னையில் இருந்து வந்திருந்த இந்திய கடற்படையின் தமிழக கடற்படை அதிகாரி [பொறுப்பு) வினித் தலைமையில் மீனவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமேசுவரம் கடற்படை முகாம் கமாண்டர் ஏ.கே.தாஸ், கடலோர காவல்படை அதிகாரி உஜ்ஜல்சிங், மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ், கடலோர போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், துறைமுக அதிகாரி விஜய், மீன்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, எமரிட், சகாயம் அந்தோணி உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக கடற்படை அதிகாரி [பொறுப்பு) வினித் பேசியதாவது:–
இந்திய கடல் எல்லையை தாண்டி மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். எல்லை தாண்டுவதோடு மட்டுமல்லாமல் இலங்கை கரையோரம் வரையிலும் உள்ள கடல் பகுதி வரையிலும் மீன் பிடிக்க செல்வதாக இலங்கையில் உள்ள மீனவர்கள் இலங்கை கடற் படையினரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் வராமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் எல்லையை தாண்டி இலங்கை கல்பட்டி கடல் பகுதி வரையிலும் இந்திய மீனவர்கள் அதிகமாக மீன் பிடிக்க வருவதாக தகவல் வருகின்றது. இதனால் கல்பட்டியில் உள்ள சிங்கள மீனவர்கள் இந்திய மீனவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் எந்த நேரத்திலும் நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் எனவும் தெரிவித்து வருவதாகவும் தகவல் வருகின்றது. ஆகவே பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
கடந்த 1 ஆண்டில் மட்டும் 350 இந்திய மீனவர்களை கைது செய்ததில் 50 மீனவர்கள் மட்டுமே அடையாள அட்டை வைத்திருந்ததாகவும் மற்றவர்களிடம் அடையாள அட்டை இல்லாமல் இருந்ததாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் அடையாள அட்டை அல்லது பயோமெட்ரிக் அடையாள அட்டையுடன் மீன் பிடிக்க செல்ல வேண்டும். இரவு நேரங்களில் மீன் பிடிக்கும் போது பெரும்பாலான மீனவர்கள் படகுகளில் விளக்கை அணைத்து விட்டு மீன் பிடித்து வருகின்றனர். இப்படி மீன் பிடிக்கும் சமயத்தில் ரோந்து கப்பல்கள் ஏதும் வரும் பட்சத்தில் படகு கடலில் இருப்பது தெரியாததுடன் எதிர்பாரதவிதமாக கப்பல் படகு மீது மோத நேரிடும். இது போன்று படகுகளில் விளக்கை அணைத்து மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க வேண்டாம்.
இந்திய–இலங்கை கடற்படை கூட்டு ரோந்தில் ஈடுபடுவது குறித்து டெல்லியில் உயர்மட்டகுழு கூட்டத்தில் இரு நாட்டு பாதுகாப்பு துறையும் அரசும் தான் இது குறித்து முடிவு செய்யும். இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில் மீனவர்கள் சேசு, எமரிட், சகாயம் ஆகியோர் பேசியதாவது:–
கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்கலாம் என்ற ஒப்பந்தத்தை மீறி இலங்கை கடற்படை செயல்பட்டு வருகின்றது. ராமேசுவரத்தில் இருந்து இந்திய கடல் எல்லை 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் முடிவடைகின்றது. பன்னாட்டு சட்ட விதிகள் படி எல்லையை அடையாம் வைத்து மீனவர்களை கைது செய்யக் கூடாது. அது போல் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக இலங்கை கடற் படையினர் தமிழகத்தை சேர்ந்த 187 படகு களை பிடித்து வைத்துள்ளனர். கடந்த 1 வருடத்திற்கு மேலாகவே இந்திய கடல் எல்லையை தாண்டி மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்வது கிடையாது. மீனவர்களை கண்காணிக்க வேண்டுமனால் திங்கள், புதன், சனிக் கிழமை ஆகிய நாட்களில் இந்திய கடல் எல்லையில் கூடுதலாக ரோந்து கப்பல்களை மீனவர்களுக்கு பாதுகாப்பாக நிறுத்த வேண்டும். இலங்கை கடற் படையினர் தான் இந்திய கடல் பகுதிக்கள் வந்து மீனவர் களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியத்து வருகின்றனர். இவ்வாறு தெரிவித்தனர்.
இதற்கு அதிகாரி வினித் பதிலளிக்கையில், திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய 3 நாட்களிலும் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். அது போல் தமிழகத்தில் 200 படகுகளில் எல்லை தாண்டி சென்றால் எச்சரிக்கை கொடுக்கும் டிரான்ஸ்பான்ட் கருவி பொருத்தப் பட்டுள்ளது. விரைவில் அனைத்து படகு களிலும் இந்த எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்படும் என்றார்.