சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கிய 2 வாலிபர்கள் பிணமாக மீட்பு

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் குளித்த 2 வாலிபர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.

Update: 2018-09-25 22:15 GMT

சத்தியமங்கலம்,

திருப்பூர் அருகே உள்ள 15 வேலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் ஆனந்தன் (வயது 20). அதேப்பகுதியை சேர்ந்த மோகனின் மகன் எபில் (23), லாரன்சின் மகன் அலெக்ஸ் (20). இதில், ஆனந்தன், எபில், அலெக்ஸ் ஆகிய 3 பேரும் நண்பர்கள். மேலும் அவர்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.

கடந்த 23–ந்தேதி இவர்கள் 3 பேரும் மாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டாமுத்தனூர் பகுதியில் செல்லும் பவானி ஆற்றுக்கு ஓரே மோட்டார்சைக்கிளில் வந்தனர். பின்னர் பவானி ஆற்றில் குளிப்பதற்காக அவர்கள் 3 பேரும் சென்றனர். இதில் ஆனந்தனும், எபிலும் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர். அலெக்ஸ் ஆற்றின் கரையில் நின்றுகொண்டு இருந்தார்.

அப்போது ஆனந்தனும், எபிலும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதில் தண்ணீரில் மூழ்கினார்கள். மேலும் அவர்களை ஆற்றுத்தண்ணீர் இழுத்துச்சென்றது. அலெக்சுக்கு நீச்சல் தெரியாதால் அவர்களை காப்பாற்ற முடியாமல் தவித்தார். மேலும் அவர் சத்தம் போட்டு கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். மேலும் ஆற்றில் குதித்து அவர்களை தேடினார்கள். ஆனால் ஆனந்தனையும், எபிலையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட அவர்கள் 2 பேரையும் தேடினார்கள். இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அன்றும் அவர்கள் 2 பேரையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இந்தநிலையில் நேற்றும் பவானி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் ஆனந்தனையும், எபிலையும் தேடினார்கள். இதில் ஆனந்தன் சத்தியமங்கலம் அருகே செம்படாம்பாளையம் பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் பிணமாக மிதந்தார். மேலும் மற்றொருவரான எபில் கொடிவேரி அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் பிணமாக மிதந்தார். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடல்களை மீட்டனர்.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆனந்தன் மற்றும் எபிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆற்றில் மூழ்கி இறந்த ஆனந்தன் மற்றும் எபிலின் உடல்களை பார்த்து அவரை உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்