மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா
தாண்டவன்குப்பத்தில் அடிப்படை வசதி இல்லை என்று கூறி, மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
நெய்வேலி தாண்டவன் குப்பம் பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெய்வேலி தாண்டவன்குப்பம் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே மாற்று இடம் கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தபோது கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் பள்ளி விடுமுறையில் இடம் கொடுத்துவிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. உள்ளூரிலும் வீடு கட்ட முடியாததால் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்.
மேலும் என்.எல்.சி.நிறுவனத்தில் 2 பனைமரம் உயரத்துக்கு நிலக்கரியை கொட்டி வைத்துள்ளார்கள். காற்று வீசும்போது நிலக்கரிதுகள்கள் காற்றில் பறந்து விபத்துகள் நிகழ்கின்றன. எனவே எங்களின் மனவேதனையை உணர்ந்து உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் கடலூர் மாவட்ட உடல் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாதத்தில் 3 மற்றும் 4-வது புதன்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி மற்றும் மருத்துவ முகாம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மேற்படி முகாம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆரம்பசுகாதார நிலையத்தில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வந்த முன்னாள் டிரைவர்கள் கலெக்டர் அன்புசெல்வனிடம் கொடுத்த மனுவில், கடந்த 2004-ம் ஆண்டு முதல் அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில் தினக்கூலி அடிப்படையில் டிரைவராக சிறப்பாக பணிபுரிந்து வந்த எங்களை கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென பணியில் இருந்து விடுவித்துவிட்டனர். இதனால் நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக பணியின்றி வறுமையில் உள்ளோம். எனவே தினக்கூலி அடிப்படையில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.