மோட்டார் வாகன ஆய்வாளரின் மேலும் 2 வங்கி லாக்கர்கள் திறப்பு
கள்ளக்குறிச்சியில் லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் மேலும் 2 வங்கி லாக்கர்கள் நேற்று திறக்கப்பட்டன. அதில் தங்கம், ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் இருந்ததை கண்டு சோதனை செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.;
கடலூர்,
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளராக பாபு(வயது 55) இருந்தார். இவர், புதிய வேனுக்கு பதிவு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இதற்கு உடந்தையாக செயல்பட்டதாக அவரது உதவியாளர் செந்தில்குமாரும் சிக்கினார்.
இதைத்தொடர்ந்து கடலூர் செம்மண்டலம் தவுலத்நகரில் உள்ள பாபுவின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த ரூ.30 லட்சத்து 17 ஆயிரம், தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் பாபுவின் 21 வங்கி கணக்குகளையும், 6 லாக்கர்களையும் வங்கி அதிகாரிகள் மூலம் லஞ்சஒழிப்பு போலீசார் முடக்கினர். அதேபோல் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் வங்கி கணக்கு களும் முடக்கப்பட்டன.
கடந்த 19-ந் தேதி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, கணக்கு வைத்துள்ள கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் சென்றனர். அங்கு பாபுவின் மனைவி மங்கையர்கரசி முன்னிலையில் பாபு பெயரில் இருந்த 3 லாக்கர்களை திறந்து பார்த்தனர். அதில் இருந்த 10 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளிப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் பாபுவின் பெயரில் உள்ள மற்ற லாக்கர்கள், மற்றொரு நாளில் திறந்து கணக்கிடப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் எழிலரசி, சண்முகம், ஏட்டுகள் பாலமுருகன், மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கணக்கு வைத்துள்ள கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பாபுவின் பெயரில் இருந்த 2 லாக்கர்களை திறந்து சோதனை செய்தனர். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் ½ கிலோ நகைகள், ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகளின் ஆவணங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து நகைகள் மதிப்பிடப்பட்டன. பின்னர் நகைகளும், சொத்து ஆவணங்களும் லாக்கரில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இது குறித்து லஞ்சஒழிப்பு போலீசார் கூறும்போது, கடந்த முறை பாபுவின் பெயரில் இருந்த 3 வங்கி லாக்கர்களை திறந்து சோதனை நடத்தியபோது தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் அதிக அளவில் சிக்கின. ஆனால் இன்று (நேற்று) நடைபெற்ற சோதனையில் நகைகள் குறைவாகவும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளன. தொடர்ந்து செவ்வாய்க் கிழமை (இன்று) கடலூர் பாரதிசாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பாபுவின் பெயரில் உள்ள மற்றொரு வங்கி லாக்கரை திறந்து சோதனை நடத்த உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.