பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும்

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

Update: 2018-09-24 21:30 GMT
தேனி,


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் மனு அளிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில், நிர்வாகிகளும், தென்கரை பேரூராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கரை பேரூராட்சி 4-வது வார்டு வள்ளியம்மை தெருவில் சுகாதார வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில் மாணவர்கள் அளித்த மனுவில், “ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் வந்து செல்லக்கூடிய தேனி பழைய பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை மற்றும் தேவதானப்பட்டி அரசு பள்ளிக்கு எதிரில் உள்ள தனியார் மதுபான கூடம் ஆகியவற்றை அடைத்து பொதுமக்களையும், மாணவர்களையும் பாதுகாக்க வேண்டும்.

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப்படாமல் உள்ள இலவச பஸ் பயண அனுமதி சீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் மேகமலை மற்றும் ஹைவேவிஸ் மலைப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், “எங்கள் பகுதியில் பல தலைமுறைகளாக குடியிருக்கும் மக்களுக்கு சொந்த வீடு கிடையாது. வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்து வருகிறோம். எனவே இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.

உத்தமபாளையம் அருகே உள்ள தே.மீனாட்சிபுரம் பென்னிகுவிக் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்த மனுவில், “எங்கள் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஆடுகள் திருட்டு போகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த மாதம் விவசாயி ஒருவரின் பசு மாடு திருடு போனது. இதுகுறித்து தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே திருடர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.

சீர்மரபினர் நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘தமிழகத்தில் குற்றப்பழங்குடி சட்டத்தால் பாதிக்கப்பட்ட 68 சாதியினரை சீர்மரபினர் என்று தனி பட்டியலில் வைத்துள்ளனர். இந்த மக்களுக்கு தொடர்ந்து சமூக நீதி மறுக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பழங்குடி சீர்மரபினர் (டி.என்.டி.) என்று சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. 1979-ம் ஆண்டில் இருந்து சீர்மரபினர் சாதி (டி.என்.சி.) என்று சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே மீண்டும் டி.என்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும். எங்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும்’ என்று கூறியிருந்தனர். 

மேலும் செய்திகள்