இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் முறையீடு

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரி மேச்சேரி பகுதி மக்கள் கலெக்டர் ரோகிணியிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

Update: 2018-09-24 22:15 GMT
சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஓமலூர் செம்மண் கூடல் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் மக்கள் திரண்டு வந்து கலெக்டர் ரோகிணியிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டது.

அதன்பிறகு குடிநீர் குழாய் அமைக்கவில்லை. ஊருக்கு பொதுவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தண்ணீர் பிடிக்கும் போது பொது மக்களுக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது. எனவே குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அதே போன்று அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

இதே போன்று மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கச்சரானூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்து கலெக்டரிடம் முறையிட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் பகுதியை சேர்ந்த நர்மதா என்பவர் ஒரு மனு கொடுத்தார். அதில் ‘எனக்கும், சேலத்தில் பணியாற்றி வரும் தாசில்தார் ஒருவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் என்னை விட்டு விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து உள்ளார். எனவே எனக்கு நீதி வழங்கி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒரு மனு கொடுத்து உள்ளார். அதில் 9-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 15-ந்தேதி கடத்தி சென்று விட்டார். இது குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தனது மகளை மீட்டு தரவேண்டும். மேலும் கடத்தி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதே போன்று வீரபாண்டி கிராமம், கொம்பாடிபட்டி, சுகுமார் காலனி மக்கள் தங்கள் ஊரில் சாமி சிலை வைத்து வழிபட எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.

சேலத்தை சேர்ந்த சிறுவன் மணிகண்டன். இவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் புறா பிடிக்க சென்ற போது தவறி கீழே விழுந்து கை, கால் உள்ளிட்ட உடலில் பல இடங்களில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த நிலையில் சிறுவன் மணிகண்டன் தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தான். அதில் புறா பிடிக்க அழைத்து சென்று அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தில் இருந்து தள்ளி விட்ட வாலிபர்கள் தன்னை மிரட்டுவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளான். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்