மல்லூர் அருகே உதவி வேளாண்மை அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை

மல்லூர் அருகே உதவி வேளாண்மை அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-24 21:44 GMT
பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள பாரப்பட்டி கிராமம் சென்னாகல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக் குமார் (வயது 54). இவர் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

இவருடைய மனைவி இந்திரா (50). இவர்களுடைய மகன் விஜயன் (23). என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். சிவக்குமார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் விழுப்புரத்தில் இருந்து வெண்ணந்தூருக்கு இடமாறுதலாகி வந்து பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் சிவக்குமார் நேற்று காலை தனது வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தேவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிவகுமாரின் மனைவி இந்திரா மல்லூர் போலீசில் அளித்த புகார் அளித்தார்.

அதில், சிவக்குமார் ஆட்டையாம்பட்டியில் உள்ள உழவர் சந்தையில் வேளாண் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். அவரை அங்கிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாறுதலை விரும்பாத சிவக்குமார் அதிகாரிகளிடம் பேசி நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூருக்கு பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளார். அங்கு 6 மாத காலமாக முடிக்கப்படாமல் இருந்த பணிகளை உடனடியாக முடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாலும், அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவும் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார் என கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இடமாறுதல் மற்றும் வேலைப்பளு காரணமாக சிவக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். உதவி வேளாண்மை அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்