குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கல்குவாரிக்கு தடை விதிக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

முசிறி அருகே உள்ள கல்குவாரிக்கு தடை விதிக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2018-09-24 22:45 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில், முசிறி அருகே மீனாட்சிபுரம், கரட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் “கரட்டாம்பட்டி கிராமத்தில் நீர்பிடிப்பு பகுதியில் அரசால் கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டு, அதன்மேல் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டது. இந்த நீர்நிலை வடகிழக்கு பருவமழையின் போது நிரம்பி வழிந்து வெளியனூர் ஏரியை அடையும். இதனை இடித்து அகற்றி அந்த இடத்தில் கல்குவாரி கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது. கலெக்டர் நேரில் வந்து கசிவுநீர் குட்டையை பார்வையிட வேண்டும். கல்குவாரி அமைக்கப்பட்டால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். கால்நடைகள் தண்ணீர் குடிக்க வழியில்லாத நிலை ஏற்படும். எனவே கல்குவாரி அமைக்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், “கரூர் மாவட்டம் மாயனூர் முதல் தாயனூர் வரையிலான பழைய கட்டளை மேட்டுவாய்க்காலில் கடைமடை பகுதிக்கு இதுவரை காவிரி தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விளைநிலங்கள் நிலத்தடி நீரின்றி வறண்டு போய் நாற்று நட முடியாமல் உள்ளது. எனவே பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து அரியாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இதேபோல் த.மா.கா. விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் அளித்த மனுவில், “கட்டளை மேட்டு வாய்க்கால் பாசன பகுதிகளான தாயனூர் சுண்ணாம்புகாரன்பட்டி, கொய்யாதோப்பு, போசம்பட்டி சின்னக்குளம், எட்டரை போதாவூர், புலியூர் அதவத்தூர், அல்லித்துறை சாந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. லால்குடி அய்யன்வாய்க்காலில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

மக்கள் பாதை அமைப்பு நிர்வாகிகள் அளித்த மனுவில், “அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதை தவிர்த்து தமிழில் கையெழுத்திட வேண்டும். அரசு அலுவலகங்களில் கோப்புகள், பதிவேடுகள், குறிப்புகள் உள்ளிட்டவை தமிழிலேயே இடம்பெற வேண்டும். ஏற்கனவே அரசு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தனர். மேலும் தமிழில் கையெழுத்திட வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர். கலெக்டர் ராஜாமணி உள்பட அரங்கத்தில் இருந்தவர்கள் தமிழில் கையெழுத்திட்டனர்.

ஆமூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தங்களது ஊரில் சேலம் மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாவட்ட தலைவர் சம்சுதீன் அளித்த மனுவில், அரியமங்கலத்தில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் பகுதியை தாண்டி இருபுறமும் செல்லக்கூடிய இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதில் நடைபாதையை கடக்கும் இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கவும், வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இதேபோல் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் ராஜாமணி அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் 35 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நாப்கின் வெண்டிங் எந்திரம், 21 பயனாளிகளுக்கு உதவித்தொகை, கலெக்டர் தன் விருப்ப நிதியில் இருந்து 2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜாமணி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மகளிர் திட்ட அதிகாரி பாபு உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்