பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்

திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2018-09-24 23:00 GMT
திருச்சி,

திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மாயனூர் முதல் கல்லணை வரை மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும். மாட்டு வண்டிகள் மணல் அள்ள தடைவிதிக்கப்பட்டதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் சிறிய கட்டுமானம் மற்றும் மராமத்து வேலைகளை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

எனவே, பாரம்பரியமாக மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும், கட்டிட தொழிலை முடக்க கூடாது, வறுமையில் வாடும் மாட்டு வண்டி தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம்(சி.ஐ.டி.யு) சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் உதவி கமிஷனர் சிகாமணி தலைமையில் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், சிறுவர், சிறுமியர் என திரளானவர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பியபடியே இருந்தனர்.

இந்த போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் ராமர், சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட தலைவர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். இதில் திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மோகன், குணா, மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 1 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்தனர். அதிகாரிகள் தரப்பில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ராஜா, போலீஸ் உதவி கமிஷனர் சிகாமணி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, மண்ணச்சநல்லூர் தாலுகா மாதவபெருமாள் கோவில் மணல் குவாரியில் அரசு அனுமதித்த எல்லைக்குள் மணல் எடுக்க அனுமதிப்பது. அதற்காக இன்னும் ஒருவார காலத்திற்குள் குவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் லால்குடி தாலுகா அரியூர் மணல் குவாரியில் ஒருவார காலத்திற்குள் மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதால் 4 மாத காலத்திற்கு அனுமதி பெறப்பட்ட குவாரிகளில் மணல் அள்ள இயலாது. தண்ணீர் பாசனம் நின்றவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முடிவு எட்டப்பட்டது. இந்த முடிவுகளை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்