பள்ளிக்கூட பஸ் சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி

புனேயில் பள்ளிக்கூட பஸ் சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2018-09-24 21:30 GMT
புனே,

புனே வித்தல்நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாணவன் சகில் செலார் (வயது16). இவன் மகராசிநகரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று டியூசன் செல்வதற்காக தான் வசிக்கும் கட்டிடத்தில் இருந்து சைக்கிளில் வெளியே வந்தான்.

அப்போது, திடீரென சைக்கிள் டயர் சறுக்கியதில் நிலைதடுமாறி கீேழ விழுந்தான். இதில், துரதிருஷ்டவசமாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த பள்ளிக்கூட பஸ் ஒன்றின் பின்பக்க சக்கரத்தில் மாணவன் சகில் செலார் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடித்தான்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பள்ளி பஸ் டிரைவர் கிருஷ்ண பாஜிராவ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்