மனித உரிமை ஆணையத்தில் மாணவி சோபியா வாக்குமூலம்
பா.ஜனதாவினர் மற்றும் போலீசார் மீது புகார் அளித்த மாணவி சோபியா நெல்லையில் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.
நெல்லை,
தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்தவர் சாமி. இவருடைய மகள் சோபியா. ஆராய்ச்சி மாணவியான இவர் கனடா நாட்டில் படித்து வருகிறார். கடந்த 3-ந்தேதி இவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தார். அதே விமானத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார்.
அப்போது சோபியா பா.ஜனதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வாக்குவாதமும் ஏற்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபியாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சோபியாவின் தந்தை சாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சோபியாவை பா.ஜனதாவினர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், போலீசார் பலமணி நேரம் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் புகாரில் கூறிஇருந்தார்.
இந்த புகார் மனுவை மாநில மனித உரிமை ஆணையம் ஏற்றுக்கொண்டது. மேலும் நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய விசாரணையின்போது ஆஜராகுமாறு சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் மாநில மனித உரிமைய ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று வழக்கு விசாரணையை நடத்தினார்.
அப்போது மாணவி சோபியா, அவருடைய தந்தை சாமி ஆகியோர் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் ஆஜரானார்கள். அவர்கள் தரப்பில் வக்கீல் அதிசயகுமார் தலைமையில் வக்கீல்களும் ஆஜரானார்கள். மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகுமாறு புதுக்கோட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திருமலைக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் திருமலையும் நேற்று ஆஜரானார்.
சோபியா தரப்பிலும், இன்ஸ்பெக்டர் திருமலை தரப்பிலும் நீதி பதியிடம் எழுத்து மூலமாக வாக்குமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை தொடர்பாக நீதிபதி ஜெயச்சந்திரன் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி சோபியா தனது நேரடி வாக்குமூலத்தையும் அளித்தார்.
விசாரணை ஒத்திவைப்பு
பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை, ‘மாணவி சோபியா வெளிநாடு செல்லவும், விமான பயணத்துக்கும் எந்தவித இடையூறும் அளிக்க மாட்டோம்‘ என தெரிவித்தார். இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஆணையத்தில் பதில் அளிக்குமாறு அவருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அடுத்த விசாரணையின்போது, சோபியா மீது வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விசாரணையை வருகிற அக்டோபர் மாதம் 26-ந்தேதிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.
இதையடுத்து சோபியாவின் வக்கீல் அதிசயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது மாணவி சோபியா, அந்த விமானத்தில் பயணம் செய்த தமிழிசையை பார்த்து அவரது காதில் படும்படியாக, பாரதீய ஜனதா பாசிச ஆட்சி ஒழிக என்று கூறியதாக அவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அப்போது பல மணி நேரம் விமான நிலையம், போலீஸ் நிலையத்தில் மாணவியை சித்ரவதை செய்து உள்ளனர். அதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரின்பேரில் விசாரணைக்கு சோபியாவும், அவரது தந்தை சாமியும் ஆஜரானார்கள். என்னென்ன மனித உரிமை மீறல்கள் நடந்தது என எழுத்து மூலம் தாக்கல் செய்து உள்ளோம்.
சோபியாவை கைது செய்து சிறையில் அடைத்தது தவறு என ஆணையத்திடம் கூறிஉள்ளோம். மேலும் இந்த சம்பவத்தில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக அடுத்த கட்டமாக வழக்கும் தொடருவோம். அதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
தமிழிசை மீது சோபியாவின் தந்தை சாமி கொடுத்த புகாரின்பேரில் விசாரித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அந்த புகார் தொடர்பாக 7 நாட்களுக்குள் ஏன் பதில் அளிக்கவில்லை? என்று நீதிபதி கேட்டார்.
விமான நிலைய பிரச்சினை என்றால் விமானி அல்லது விமான பணிப்பெண் புகார் அளித்து இருக்க வேண்டும். தமிழிசை மாணவியின் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்று கூறிஉள்ளார். மாணவி சோபியாவின் பின்னணி தாயும், தந்தையும்தான், வேறெதுவும் கிடையாது. அது தொடர்பாக போலீசாரின் பல்வேறு பிரிவினர் விசாரித்தபோது, மாணவியின் கல்வி தொடர்பான கேள்விகளையே அதிகமாக கேட்டனர். மாணவிக்கு தற்போது தொந்தரவு இல்லை. சோபியாவுக்கு மேலும் ஓராண்டு படிப்பு உள்ளது. எனவே, அவர் விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார்.
இவ்வாறு வக்கீல் அதிசயகுமார் கூறினார்.