புதிய கோர்ட்டு வளாகத்தில் அடிப்படை வசதிகள் கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி புதிய கோர்ட்டு வளாகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-24 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டு வளாகம் தடங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ட்டு வளாகம் கடந்த சில மாதங்களாக செயல்பட தொடங்கி உள்ளது. இந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் எழில்சுந்தரம், பொருளாளர் சந்தோஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். புதிய கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கான சேம்பர் அமைக்க வேண்டும். அந்த வளாக பகுதியில் செல்போன்கள் தங்குதடையின்றி செயல்பட வசதியாக புதிய செல்போன் கோபுரத்தை அமைக்க வேண்டும்.

கோர்ட்டு வளாகத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் தார்சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களையும், நீதித்துறை பணியாளர் காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். 2 புதிய கோர்ட்டுகளை உடனடியாக திறக்க வேண்டும்.

கோர்ட்டுக்கு செல்லும் சாலையை பென்னாகரம் சாலையுடன் இணைக்க வேண்டும்.

வக்கீல் சங்கத்தினர் கேன்டீன் அமைக்க கோர்ட்டு வளாகத்தில் இலவசமாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்