வீட்டு சுவர் இடிந்து விழுந்து விவசாயி பலி மகன், பேரன் படுகாயம்

கூத்தாநல்லூர் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து விவசாயி பலியானார். அவருடைய மகனும், பேரனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2018-09-24 22:45 GMT
கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பாரதி மூலங்குடி ஊராட்சி அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் இளரா(வயது 52). விவசாயியான இவர் தனது கூரை வீட்டில் மகன் மகேஷ்(25), பேரன் மணிகண்டன்(4) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இளரா தனது மகன் மற்றும் பேரனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் உள்பக்கம் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இளரா, மகேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர்.

இதில் படுகாயம் அடைந்த இளரா சம்பவ இடத்திலேயே பலியானார். இடிபாடுகளுக்குள் படுகாயங்களுடன் சிக்கி கொண்டிருந்த அவருடைய மகன் மகேஷ், பேரன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு சுவர் இடிந்து விழுந்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்