நடிகர் துனியா விஜய் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு பெங்களூரு கோர்ட்டு உத்தரவு

உடற்பயிற்சியாளரை காரில் கடத்தி தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் துனியா விஜய் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-24 23:15 GMT
பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். இவர், தனது குடும்பத்துடன் பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி இரவு வசந்த்நகரில் உள்ள அம்பேத்கர் பவனில் நடந்த ‘பெங்களூரு ஆணழகன்‘ போட்டியை பார்க்க நடிகர் துனியா விஜய் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அப்போது அங்கு வைத்து உடற்பயிற்சியாளரான கிர்லோஷ்கர் லே-அவுட்டை சேர்ந்த மாருதிகவுடாவுக்கும், துனியா விஜய்க்கும் இடையே மோதல் உருவானது. மேலும் மாருதிகவுடாவை காரில் கடத்திச் சென்று துனியா விஜய், அவரது நண்பர்கள் தாக்கினார்கள்.

இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் துனியா விஜய், அவரது நண்பரும் உடற்பயிற்சியாளருமான பிரசாத், நண்பர் மணி, கார் டிரைவரான மற்றொரு பிரசாத் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்கள். கைதான 4 பேரும் நேற்று முன்தினம் இரவு கோரமங்களாவில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, துனியா விஜய் உள்பட 4 பேரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் படுகாயம் அடைந்த மாருதிகவுடாவுக்கு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி நடிகர் துனியா விஜய் சார்பில் பெங்களூரு 4-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நேற்று மாலையில் நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாருதிகவுடாவை திட்டமிட்டு காரில் கடத்தி சென்று நடிகர் துனியா விஜய் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், துனியா விஜய் பிரபலமான நடிகர் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அழித்து விட வாய்ப்புள்ளதாகவும், அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் வாதாடினார்.

அதே நேரத்தில் நடிகர் துனியா விஜய் சார்பில் ஆஜராகிய வக்கீல், இது ஒரு சாதாரண தாக்குதல் வழக்கு தான். அவர் திட்டமிட்டு மாருதிகவுடாவை கடத்தி தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் துனியா விஜய் மீது வேண்டுமென்றே ஜாமீனில் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. துனியா விஜய் பிரபல நடிகர் என்பதால் இந்த வழக்கு பெரிதுபடுத்தப்படுகிறது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

அரசு மற்றும் துனியா விஜய் தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு(அதாவது நாளைக்கு) ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம் ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் நேற்று ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நடிகர் துனியா விஜய், ஜாமீன் கிடைக்காத காரணத்தால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். அதே நேரத்தில் ஜாமீன் கிடைக்காத காரணத்தால் நாளை (புதன்கிழமை) வரை அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்