பாகூரில் பரபரப்பு: கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிக்கு சரமாரி கத்திக்குத்து
பாகூரில் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்த நபர் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகியை கத்தியால் சரமாரியாக குத்தினார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பாகூர்,
புதுவை மாநிலம் பாகூர்பேட் லெனின் நகரை சேர்ந்தவர் விஜயபாலன் (வயது 51). இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொகுதிக்குழு உறுப்பினராகவும், விவசாயிகள் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளராகவும் உள்ளார்.
பாகூர் – கன்னியக்கோவில் சாலையில் உள்ள ஒரு துணிக்கடையின் மீது பாகூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் விஜயபாலன் சென்று பணிகளை கவனித்து வருவார். அதேபோல் நேற்று காலையும் கட்சி அலுவலகத்துக்கு சென்று பணிகளில் ஈடுபட்டார்.
அப்போது திடீரென்று ஒருநபர் அலுவலகத்துக்குள் புகுந்தார். அவர் விஜயபாலனிடம் தகராறு செய்தபடி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக அவரை குத்தினார். இதை தடுத்த விஜயபாலனின் கைகள் மற்றும் கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவருடைய அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் கட்சி அலுவலகத்துக்குள் வந்தனர்.
அப்போது விஜயபாலன் ரத்த வெள்ளத்தில் துடிதுடிப்பதையும், ஒருவர் கத்தியுடன் வெறிகொண்டு நிற்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பொதுமக்கள் திரண்டு விஜயபாலனை மீட்டனர். கத்தியுடன் நின்றவரை அலுவலகத்துக்குள் போட்டு பூட்டினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு விஜயபாலன் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம், பாகூர் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெயகுருநாதன், தன்வந்திரி ஆகியோர் விரைந்து சென்று, கட்சி அலுவலகத்துக்குள் பொதுமக்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பதும், தனது குடும்ப பிரச்சினையில் விஜயபாலன் தலையிட்டதால், அவரை கொலை செய்ய முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்தனர்.
குடும்ப விவகாரத்தில் தலையிட்டதால் விஜயபாலனை ஸ்ரீதர் கொலை செய்ய முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து மாநில நிர்வாகியை கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டதை அறிந்த கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.