கோத்தகிரி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை துரத்திய காட்டுயானை

கோத்தகிரி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை, காட்டுயானை துரத்தியது. இதனால் தப்பி ஓடிய அவர் தவறி விழுந்து காயம் அடைந்தார்.

Update: 2018-09-24 23:00 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள கோழித்தொரை அட்டடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி சரசு(வயது 37). பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளி. இவர்களது மகன் சந்தோஷ்(7). நேற்று காலை 7.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சரசு நடந்து சென்றார். செம்மனாரை பிரிவு அருகே புதர் மறைவில் இருந்து ஒரு காட்டுயானை திடீரென சாலையின் குறுக்கே வந்து நின்றது. மேலும் அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்த சரசுவை துரத்தியது. இதை சற்றும் எதிர்பாராத அவர், உயிர்பிழைக்க அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது சிறிது தூரத்தில் சாலை அமைக்கும் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லி கற்குவியலில் சரசு தவறி விழுந்தார். இதனால் கால் மற்றும் கையில் காயம் அடைந்த அவர் மயங்கினார். இதற்கிடையே காட்டுயானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இதையடுத்து அந்த வழியாக வந்த சிலர், சரசுவை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், அவர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனத்துறையினர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று காயம் அடைந்த சரசுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் வனத்துறையினர் கூறுகையில், செம்மனாரை பிரிவு பகுதியில் காட்டுயானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அந்த காட்டுயானை மீண்டும் ஊருக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கூட்டாடா பகுதியில் நேற்று முன்தினம் காட்டுயானை தாக்கி சாமிதாஸ் என்ற தொழிலாளி உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று அட்டடி பகுதியில் ஒரு பெண்ணை, காட்டுயானை துரத்திய சம்பவம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்