சென்னை புறநகரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது 40 பவுன் நகைகள் பறிமுதல்
சென்னை புறநகரில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பூந்தமல்லி,
சென்னையில் அரும்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட புற நகர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க அண்ணா நகர் போலீஸ் உதவி கமிஷனர் குணசேகரன், அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் சம்பவம் நடந்த இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது சம்பவம் நடந்த அனைத்து இடங்களிலும் மொபட்டில் பதிவு எண் இல்லாமல் 2 பேர் வந்து தங்கச்சங்கிலியை பறித்துச் செல்வது போல காட்சிகள் பதிவாகி இருந்தன.
கண்காணிப்பு கேமரா
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில் நடந்து சென்ற திருப்பதி என்பவரிடம் மொபட்டில் வந்த 2 பேர், அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர்.
அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டதையடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த 2 பேரை மடக்கிப் பிடித்தனர். மேலும் சங்கிலி பறிப்பு தொடர்பாக ஏற்கனவே கண்காணிப்பு கேமராவில் பதிவான அதே நபர்கள்தான் இவர்கள் என்பது உறுதியானது.
3 பேர் கைது
பிடிபட்டவர்கள் வில்லிவாக்கத்தை சேர்ந்த சபி பாட்ஷா (வயது 27), அண்ணா நகரை சேர்ந்த பிரகாஷ் (29) என்பதும் தெரியவந்தது. இவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி பெரம்பூரை சேர்ந்த ராஜ்குமார் (24) என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சபி பாட்ஷா, பிரகாஷ் 2 பேரும் மொபட்டில் அமர்ந்து கொண்டு தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நோட்டமிடுவார்கள். இவர்களுக்கு சற்று தூரத்தில் ராஜ்குமார் காரில் அமர்ந்து கொண்டு அந்த வழியே வேறு யாராவது வருகிறார்களா? என்று பார்த்துக் கொண்டு இருப்பார்.
தங்கச்சங்கிலியை பறித்தவுடன் அதை காரில் இருக்கும் ராஜ்குமாரிடம் கொடுத்து விட்டு சென்று விடுவார்கள். ராஜ்குமார் ஏதும் தெரியாதது போல் நகையுடன் காரை எடுத்து சென்று விடுவார்.
போலீசார் தங்களை பிடிக்காமல் இருக்க மொபட்டில் பதிவு எண் இல்லாமல் புதிய வாகனம் போல் வலம் வந்துள்ளனர். இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
40 பவுன் நகை பறிமுதல்
அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், ஒரு கார், 2 மொபட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் சிக்குவதற்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பெரும் உதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபி பாட்ஷா, பிரகாஷ் ஆகிய 2 பேரும் தங்கச்சங்கிலி பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.