மனைவி தூக்குப்போட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸ்காரர் கைது
திருமுல்லைவாயலில், சிறப்பு காவல்படை போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
ஆவடி,
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்திநகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் அருண் கோபிநாத் (வயது 26). இவர் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 5-ம் பட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், ரேவதி (23) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அரிஷ் (2) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் கைது
இதுகுறித்து திருமுல்லை வாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையின்போது, ரேவதி எழுதி வைத்திருந்த 3 பக்க கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், எனது கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்துகிறார். வெளி இடங்களுக்கு அழைத்து செல்வதில்லை. என்மீது வெறுப்பை காட்டுகிறார். எனது தற்கொலைக்கு எனது கணவரின் தொந்தரவு தான் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் ரேவதியை தற்கொலைக்கு தூண்டியதாக, அருண் கோபிநாத்தை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.