வாட்ஸ்-அப் வீடியோ காலில் பெண்ணிடம் ஆபாச பேச்சு: குமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

வாட்ஸ்-அப் வீடியோ காலில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய குமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-09-24 22:15 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கருங்கல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பென்சாம். இவர் போலீஸ் சீருடையில், ஒரு பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசுவது போன்ற வீடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பென்சாம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பென்சாம் ஆபாசமாக பேசியதாக புகார் கூறிய பெண், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், “கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் கடந்த 4-7-2018 அன்று என்னை வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதோடு, வீடியோ கால் செய்து ஆபாச செய்கைகளும் செய்தார். இதை யாரிடமாவது சொன்னால் என்னை குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது 4 பிரிவுகளின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்