பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் இலவச மனுக்கள் எழுதும் சேவை மையம் தொடக்கம்

பரமக்கடி தாலுகா அலுவலகத்தில் இலவச மனுக்கள் எழுதும் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-24 21:45 GMT

பரமக்குடி,

பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு சாதி, வருமானம், இருப்பிட சான்றுகள், பட்டா மாறுதல்கள், குடும்ப அட்டை மாற்றம் செய்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக முதியவர்கள், எழுதப்படிக்க தெரியாதவர்கள் இடைத்தரகர்கள் மூலம் மனுக்கள் எழுதி அதிகாரிகளை நாடி வந்தனர். இதுகுறித்து பரமக்குடி தாசில்தாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

அதனை தொடர்ந்து இடைத்தரகர்களின் பிடியில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் தாசில்தார் பரமசிவன் ஏற்பாட்டில் தாலுகா அலுவலகம் முன்பு இலவசமாக மனுக்கள் எழுதிக்கொடுக்கும் சேவை மையம் தொடங்கப்பட்டுஉள்ளது. மனுக்களை எழுதிக்கொடுப்பதற்கு பொதுமக்கள் இந்த மையத்தை நாடலாம். கட்டணம் செலுத்த தேவையில்லை.

பரமக்குடி டால்பின் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் இந்த பணியில் தினமும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தாசில்தார் பரமசிவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்