அனைத்து சலவை கூடங்களையும் நவீனப்படுத்த வேண்டும்
அனைத்து சலவை கூடங்களையும் நவீனப்படுத்த வேண்டும் என்று திருக்குறிப்பு தொண்டர் சலவை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்ட திருக்குறிப்பு தொண்டர் சலவை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோவில்பட்டியில் எத்திராஜ் பிறந்தநாள் விழா மற்றும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு பாரதிநகர் மாரியம்மன், காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து எத்திராஜ் உருவ படம் திறக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்க தலைவர் அய்யாத்துரை மாவட்ட தலைவர் அய்யனார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் மகாராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுருளிராஜன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கோமதிநகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் மாரியப்பன் வரவேற்றார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் சலவை தொழிலாளர்களுக்கு அரசு ஆணைப்படி மானிய மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரதிநகர் சலவைக்கூடம் பழுதடைந்து உள்ளது. அதை சீரமைத்து தர வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சலவை கூடங்களையும் நவீன கூடங்களாக மாற்றி தர வேண்டும், சலவை தொழிலாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் இலவச வீடுகள் கட்டிதர வேண்டும் என்பன உள்ப ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் மாரியப்பன், செல்வகுமார், தினேஷ் என்ற பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். கண்ணன் நன்றி கூறினார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.