மண் வெட்டி, கடப்பாரையுடன் திரண்டு சென்று சாலை அமைத்த கிராம மக்கள்

மாமல்லபுரம் அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதி இல்லாததால் மண்வெட்டி, கடப்பாரையுடன் திரண்டு சென்று தற்காலிக சாலை அமைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-09-23 23:45 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் 200 குடும்பங்களை சேர்ந்த 1,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் இறந்தவர்களை தகனம் செய்ய சுடுகாட்டுக்கு எடுத்து செல்வதற்கு அங்குள்ள சாலையை பயன்படுத்தி வந்தனர். அந்த சாலை கடந்த 300 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது.

அந்த சாலை இருந்த இடத்தை தனியார் ஒருவர் வாங்கி விட்டதால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால் சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம், சுடுகாட்டுக்கு செல்ல சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது வரை சாலை வசதி செய்து தராததால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல குழிப்பாந்தண்டலம் கிராம மக்கள் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர்.

நேற்று அந்த கிராம மக்கள் குழிப்பாந்தண்டலம் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழக துணைத்தலைவர் பத்மநாபன் தலைமையில் கடப்பாரை, மண் வெட்டியுடன் சென்று வயல்வெளி பகுதியில் தாங்களே தற்காலிக சாலையை ஏற்படுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டும், வேண்டும். சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.

எனவே நில எடுப்பு பிரிவின் கீழ் தனியாரிடம் இருந்து நிலத்தை வாங்கி சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி செய்து தரவேண்டும் என்றும், இல்லையென்றால் அடுத்த கட்டமாக கிராம மக்கள் கூட்டாக இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றும், தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோருக்கும் கிராம மக்கள் மனு அனுப்பி உள்ளனர்.

இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. கிளை செயலாளர் மோகன், மகளிர் குழுவை சேர்ந்த ஜோதி மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்