பஸ் கவிழ்ந்து 38 பக்தர்கள் காயம் ; ஆன்மிக சுற்றுலா சென்றபோது விபத்து

ஆன்மிக சுற்றுலா சென்றபோது வேப்பூரில் பஸ் கவிழ்ந்ததில் 38 பக்தர்கள் காயமடைந்தனர்.

Update: 2018-09-23 21:45 GMT
வேப்பூர்,


பீகார் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள், தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு பஸ்சில் ராமேசுவரம் நோக்கி புறப்பட்டனர். அந்த பஸ்சை பீகாரை சேர்ந்த முகமதுஅரிப் (வயது 50) என்பவர் ஓட்டினார்.

பஸ், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி பீகாரை சேர்ந்த பாக்கியநாராயணன்(வயது 58), மோகன்சிங்(60), தனா(60), பேகரிதேவி(45), மஜேந்ராஜ்(40), சொக்கிராராம்(42), தானிதேவி(62), புதியதேவி(52), எலசியாதேவி(50) உள்பட 38 பேர் காயம் அடைந்தனர். பஸ்பலத்த சேதமடைந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த 32 பேர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், 6 பேர் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர் அந்த கிரேன் மூலம், விபத்துக்குள்ளான பஸ் அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது. விபத்து குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்