பஸ்சில் கடத்திவரப்பட்ட ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து பஸ்சில் கடத்திவரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்காவை பண்ருட்டியில் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 வியாபாரிகளை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-09-23 21:45 GMT
பண்ருட்டி, 


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் தனியார் பஸ்சில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு (பொறுப்பு) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 6 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். மேலும் இது தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த 4 வியாபாரிகளை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் செய்திகள்