இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க அரசு நடவடிக்கை - மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே

இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதாக மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

Update: 2018-09-23 22:52 GMT
பெங்களூரு,

துமகூரு மாவட்டம் துருவகெரே தொகுதிக்கு உட்பட்ட இரேஹள்ளி தொழிற்பேட்டையில் அரசு உபகரணங்கள் மற்றும் பயிற்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

வேலை வாய்ப்புகளை உருவாக்குவது பெரும் சவாலாக உள்ளது. எந்திரங்கள் மனிதர்களின் பணிகளை செய்வதால், மனிதர்களுக்கான வேலைகள் பறிபோகின்றன. போட்டி தீவிரம் அடைந்துள்ளது. தரத்திற்கு அதிக முக்கியத்துவம் வந்துள்ளது. மனிதவளத்திற்கு குறைபாடு ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பெங்களூருவுக்கு மாற்றாக தொழில்துறையில் வளர்ந்து வரும் துமகூருவில் இந்த மையம் அமைக்கப்படுவது முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக அமையும். இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. கர்நாடகத்தில் இதுவரை 22 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்னும் 6 மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக தொழில் சந்தையில் போட்டிபோட வேண்டுமென்றால், எல்லா வகையான நவீன தொழில்நுட்பத்தை நாம் வைத்திருக்க வேண்டும். இந்த திசையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு ஆர்.வி.தேஷ்பாண்டே பேசினார்.

மேலும் செய்திகள்