ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஆய்வுக்குழுவிடம் 2 ஆயிரம் மனுக்கள் குவிந்தன

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவிடம் 2 ஆயிரம் மனுக்கள் குவிந்தன. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று நீதிபதி தருண் அகர்வால் தெரிவித்தார்.

Update: 2018-09-23 22:00 GMT
தூத்துக்குடி, 



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் ஆணையின்படி கடந்த மே மாதம் 28-ந் தேதி ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆய்வு செய்வதற்காக குழு அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குனரக என்ஜினீயரும், விஞ்ஞானியுமான வரலட்சுமி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் புதுக்கோட்டை உப்பாற்று ஓடை அருகே ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு இருப்பதை நேரில் பார்வையிட்டனர்.

நேற்று 2-வது நாளாக ஆய்வை தொடங்கினர். அவர்கள் நேற்று காலை 8.30 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றனர். அப்போது மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி தாசில்தார் சிவகாமசுந்தரி, மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் லிவிங்ஸ்டன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை தரப்பினரும் குழுவினருடன் சென்றனர்.

அங்கு ஜிப்சம் கொட்டி வைக்கப்பட்டு இருந்த பகுதி, தாமிரதாது வைக்கப்பட்டு இருந்த பகுதி மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு இருக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுமார் 1 மணி 53 நிமிடம் ஆய்வு நீடித்தது. 10.23 மணிக்கு குழுவினர் ஆய்வை முடித்துக் கொண்டு ஆலையில் இருந்து வெளியே வந்தனர்.

பின்னர் அவர்கள் தெற்கு வீரபாண்டியபுரம் சுடுகாடு பகுதி, டி.குமாரகிரி, காயலூரணி பகுதிகளுக்கு சென்றனர். அங்கு பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள தண்ணீரை காண்பித்தனர். பின்னர் அ.குமரெட்டியாபுரம் பகுதிக்கு வந்து, பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். அப்போது மக்கள், எங்கள் ஊரில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 வயது குழந்தைக்கு மூச்சு திணறல், இளைப்பு போன்ற நோய்கள் வந்து உள்ளது. எங்களுக்கு இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து ஆய்வுக்குழுவினர் அங்கிருந்து புறப்பட முயன்றனர். அப்போது 3 வேன்களில் சுற்றுவட்டாரங் களை சேர்ந்த மக்கள் அ.குமரெட்டியாபுரத்துக்கு வந்தனர். அவர்கள் ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சுற்றுப்புற சூழலை சரியான முறையில் பராமரித்து எங்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை சில உண்மைக்கு புறம்பான செய்திகளால் மூடப்பட்டு உள்ளது. எனவே மக்கள் நலனை கருதி ஆலையை திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனை அறிந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், மனு கொடுக்க வந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

அதன்பிறகு ஆய்வுக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்தனர். அங்கு ஆலை ஊழியர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் ஆய்வுக்குழுவினர் காலை 11.40 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்பினர், ஊர் மக்கள் திரளாக வந்தனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி வந்தனர். அவர் கள் ஒவ்வொருவராக, கருத்து கேட்புக்காக அமைக்கப்பட்டு இருந்த தனி அறையில் ஆய்வுக்குழுவினரை சந்தித்து மனுக்களை அளித்தனர்.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுப்பதற்காக சிலர் வந்தனர். இதனால் அங்கு நின்று கொண்டு இருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், திரண்டு சத்தம் போட்டபடியே ஆதரவு மனு கொடுக்க வந்தவர்களை நோக்கி வந்தனர். அவர்களுக்கு எதிராக சத்தம் போட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார், ஆதரவு மனு அளிக்க வந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் ஆலை எதிர்ப்பாளர்கள், மனு கொடுப்பதற்காக வரிசையில் நின்ற சிலரையும் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்து இருப்பதாக கூறி அவர்களை தாக்கி மனுக்களை பிடுங்கினர். உடனடியாக போலீசார் தலையிட்டு அமைதிப்படுத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்தவர்கள் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சிறிது தூரத்தில் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை நோக்கி ம.தி.மு.க.வினர் வேகமாக சென்று தாக்க முயன்றனர். அந்த பகுதியில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆதரவு மனு கொடுக்க வந்தவர்களை போலீஸ் வேனில் ஏற்றி சிறிது தூரம் கொண்டு சென்று இறக்கிவிட்டு வந்தனர். அதன்பிறகும், தொடர்ந்து ம.தி.மு.க. வினர் கருத்து கேட்பு நடந்த வளாகத்தில் சுற்றி வந்தனர். இதனால் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதனால் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் வேறு வழியில் திருப்பி விட்டனர். இதன் காரணமாக பலர் மனு கொடுக்காமலேயே திரும்பி சென்றனர்.

கருத்து கேட்பு கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன், மாநில காங்கிரஸ் கமிட்டி ஏ.பி.சி. வீ.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ், தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் புதுக்கோட்டை செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வியனரசு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

மதியம் 1.40 மணியளவில் ஆய்வுக்குழுவினர் கருத்து கேட்பு கூட்டத்தை முடித்தனர். மொத்தம் 2 மணி நேரம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
பின்னர் ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று (நேற்று) காலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டோம். ஆலை பிரதிநிதிகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதி முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது. ஆலை ஊழியர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் ஆகியோரை சந்தித்து உள்ளோம். தூத்துக்குடியில் பல இடங்களிலும் ஆய்வு செய்து உள்ளோம். அதன்பிறகு பாலிடெக்னிக் கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் மனு கொடுத்து உள்ளனர். ஆலையை மூடுவதற்கு ஆதரவாக அதிக மனுக்கள் வந்து உள்ளன.

நாளை(அதாவது இன்று) சென்னையில் ஸ்டெர்லைட் வழக்கில் மனுதாரர், எதிர்மனுதாரர் ஆகியோரிடம் கருத்து கேட்கப்படுகிறது. ஆலையில் அபாயகரமான கழிவுகள் உள்ளதா? என்பது பற்றி எதுவும் கூற முடியாது. மீண்டும் தூத்துக்குடியில் ஆய்வு செய்வது தொடர்பாக எந்த முடிவும் செய்யவில்லை. இந்த ஆய்வறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். மாலையில் ஆய்வுக்குழுவினர் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர். 

மேலும் செய்திகள்