பரிகார பூஜை செய்வதாக கூறி பணம் பறிக்க முயன்ற கும்பல் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

மோதூர் கிராமத்தில் பரிகார பூஜை செய்வதாக கூறி பணம் பறிக்க முயன்ற 7 பேர் கும்பலை பொதுமக்கள், பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-09-23 22:15 GMT
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மோதூர் காலனிக்கு நேற்று முன்தினம் ஒரு ஆம்னி வேனில் 2 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் என 7 பேர் மோதூர் காலனிக்கு வந்தனர். அவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அங்குள்ள பொதுமக்களிடம் உங்கள் கிராமத்தில் சாத்தான் குடியிருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்து விரட்ட வந்ததாகவும் கூறி உள்ளனர். பின்னர் வேனில் வந்தவர்கள் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொரு வீடாக சென்று மயிலிறகால் ஆசிர்வாதம் செய்துள்ளனர்.

அந்த கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரது வீட்டுக்கு சென்ற ஒரு நபர் உனக்கு பெரும் கஷ்டம் வரப்போகிறது. உங்கள் குடும்பத்தில் சாத்தான் குடியிருந்து வருகிறான். சாத்தானை விரட்ட பரிகார பூஜை செய்தால் செழிப்புடன் வாழலாம் என்று சுரேசிடம் கூறியுள்ளான். இதை நம்பிய சுரேஷ், இவருடைய மனைவி பவுனம்மாள் மற்றும் சுரேசின் தாயார் சந்திரா ஆகியோர் அந்த நபரை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளனர்.

வீட்டுக்குள் சென்ற அந்த நபர் ஒரு தகட்டில் பவுடரை தடவி சுரேசிடம் கொடுத்துள்ளான். அதை வாங்கிய சுரேசுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நபர் தகட்டை மயானத்தில் புதைக்க வேண்டும் என்று கூறி செல்போன், ரூ.6,500 ஆகியவற்றை வாங்கிக்கொண்டு மற்றவர்களுடன் வேனில் ஏறி தப்பி செல்ல முயன்றார். இதுகுறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிய வந்தது.

இதையடுத்து பொதுமக்கள் போலம்பட்டி பகுதியில் அவர்களை மடக்கி பிடித்து வேன் மற்றும் அதில் இருந்த 7 பேரையும் காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் 7 பேரும் பரிகார பூஜை செய்வதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்