மோடியின் கண் அசைவில் தமிழக அரசு செயல்படுகிறது ; வைகோ குற்றச்சாட்டு
மோடியின் கண் அசைவில் தமிழக அரசு செயல்படுகிறது என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை,
நெல்லையில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கு கேடு சூழ்ந்து வரும் நிலைமையில், தூத்துக்குடி மாநகர மக்களையும், சுற்று வட்டார மக்களையும் பெரும் துயரத்துக்கும், துன்பத்துக்கும் ஆளாக்குகிற, சுற்றுச்சூழலை நாசமாக்குகிற ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தற்போது ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்தநிலையில் ஆலையை திறக்க வேண்டும் என்று முதலில் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்த ஆலை நிர்வாகம், நேரடியாக டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில் ஆலையை திறக்க வேண்டும் என்று மேல் முறையீடு செய்தது.
அதை எதிர்த்து ஆலையை திறக்கக்கூடாது என்று தமிழக அரசு வாதங்களை முன்வைத்தது. இந்தநிலையில் முன்னாள் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 2 நிபுணர்களை கொண்ட குழு இதுகுறித்து ஆய்வு செய்யும் என்று தீர்ப்பாயம் அறிவித்து அந்த குழு ஆய்வு நடத்தியது.
தாமிர அடர்த்தியின் கசடு, பெருமளவு எங்கெல்லாம் குவிக்கப்பட்டு உள்ளதோ? அங்கு நிலம், நீரை, காற்று மாசுபடுகிறது. இதனால் புற்றுநோய், சரும நோய்கள், நுரையீரல் நோய் ஏற்படுகிறது. விவசாயம் அழிகிறது என்ற வகையில் அங்கு குவித்து வைக்கப்பட்டு உள்ள கசடுகளை வண்டல் மண், களிமண்ணை போட்டு மூடி வைத்து உள்ளனர். அதனை நீதிபதி தலைமையிலான குழு வந்து பார்த்தனர். குழுவினரிடம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தனது கருத்துகளை கூறியது. நானும் எனது கருத்துகளை தெரிவித்தேன். பாத்திமா பாபு, வழக்கு தொடுத்த ராஜா, மற்றவர்களும் கருத்துகளை கூறினர். இன்று (அதாவது நேற்று) மக்கள் கருத்து கேட்டார்கள்.
பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக ஆலையை எதிர்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. நிர்வாகத்துக்கு ஆதரவாக எப்போதும் சிலர் நடப்பார்கள், சிலரை அழைத்து வந்து ஆலை வேண்டும் என்று கூறுவது மக்கள் கருத்து அல்ல. அது ஒரு சதவீதத்தினர் கருத்து கூட அல்ல.
நாளை (அதாவது இன்று) தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் அரங்கத்தில் இந்த குழுவினர், இது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தவர்கள், ஆலை நிர்வாகம் ஆகிய இருதரப்பு வாதத்தையும் கேட்க உள்ளனர். நானும் (வைகோ) அதில் பங்கேற்று எனது தரப்பு கருத்துகளை எடுத்து வைக்க உள்ளேன்.
பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா, கருணாஸ் எம்.எல்.ஏ. 2 பேருமே கைது செய்யப்பட வேண்டியவர்கள்தான். அவர்கள் 2 பேரின் பேச்சுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடியின் கண் அசைவில் தமிழக அரசு செயல்பட்டு, தனது உரிமைகள், சுய மரியாதையை இழந்து விட்டு தமிழகத்துக்கு வரும் கேடுகளையும் தடுக்க முடியாமல் இருக்கிறது. அதனால்தான் மேகதாதுவில் ரூ.5,912 கோடியில் அணை கட்டுவதற்கு ஏற்பாடு செய்து பொருட்களை வாங்கி குவித்து விட்டார்கள். மத்திய அரசு வெளிப்படையாக அனுமதி தரமாட்டோம், ஆனால் அணையை கட்டி கொள்ளலாம் என்று கூறிஉள்ளனர்.
எந்த சமயத்தினரின் நம்பிக்கையிலும் நாம் குறுக்கிட கூடாது. பாரதீய ஜனதா அரசு முஸ்லிம் மார்க்கத்தில் உள்ள முத்தலாக் உரிமையியலை தற்போது குற்றவியலாக மாற்றி உள்ளனர். அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் அவசர சட்டம் பிறப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அசாதாரண சூழ்நிலையில்தான் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறிஉள்ளது. இந்த நிலையில் முத்தலாக் தடை அவசர சட்டம் கொண்டு வந்திருப்பது முஸ்லிம்கள் மத்தியில் பெருத்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக, மத சார்பின்மைக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தி, இந்து, இந்துராஷ்டிரா என இந்துத்துவாவை நிலை நிறுத்த துடிக்கிறது. ஆனால் அது நடக்காது.
தமிழகத்தில் வேண்டுமென்றே பிளவு ஏற்படுத்தி, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்று விடலாம் என்று கருதினால் அது நடக்காது. பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களை அரவணைத்து கொள்ளும் மனப்போக்கு இருக்கும் போது பிளவுபடுத்தும் பாரதீய ஜனதா கட்சியின் திட்டம் நிறைவேறாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற முடியாது, ஆட்சி அமைக்க முடியாது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வருவதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு வைகோ கூறினார்.