“ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” ஆய்வுக்குழுவிடம் அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என ஆய்வுக்குழுவிடம் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Update: 2018-09-23 22:00 GMT
தூத்துக்குடி, 


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு தூத்துக்குடிக்கு வந்தது. அந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பொமக்களின் கருத்துகளை கேட்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தினர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கொடுத்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கி வந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்ட திட்டங்கள் அனைத்தையும் முறையாக பின்பற்றாமல் ஆலை தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்து உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. காற்று, நிலம், நீர் மாசுப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதனால் மக்களின் வாழ்வுரிமை அழிகிறது. எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அளித்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் நீர், காற்று மாசு காரணமாக மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் தமிழக அரசால் ஆலை மூடப்பட்டு உள்ளது. இந்த தொழிற்சாலை தனது நீர் தேவைக்கு தாமிரபரணி ஆற்று நீரை பயன்படுத்துகின்றனர். இதனால் வறட்சி காலங்களில் மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலையின் கழிவுகளால் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வந்தன. தற்போது ஆலை மூடப்பட்டு உள்ளதால் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்ற அச்சத்துடன் மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசால் மூடப்பட்ட, பொதுமக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையை மீண்டும் இந்த பகுதியில் இயங்கவிடாமல் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் கொடுத்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வந்தது. இந்த ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி ஏராளமான மக்கள் திரண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னரும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயல்வது அநீதியானது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான் தூத்துக்குடி மக்களின் எண்ணம். ஆகவே மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து, சுற்றுச்சூழலை சீர்குலைத்து, சட்டம்-ஒழுங்கு அமைதியை சீர்குலைத்து வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும், ஆலையின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக கிரிமினல் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கொடுத்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட காலத்திலேயே பல விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆலையின் விதி மீறல்களால் நிலத்தடி நீர் நஞ்சாகி உள்ளது. கால்நடைகள் இறந்துள்ளன. கடல் மாசுபட்டு உள்ளது. இத்தனை குற்றங்களுக்கு ஆளான ஆலையை அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் கொடுத்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்த காலங்களில் அதிகாலையில் வெளியிடப்படும் நச்சு புகையால் தூத்துக்குடி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் 90 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆலை மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு மிகவும் அருகே உள்ளது. இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த ஆலையை மூடி தூத்துக்குடி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மாவட்ட செயலாளர் வக்கீல் சுப்பிரமணியன் கொடுத்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்