மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பாளை. சிறை வார்டன் பலி

ஆழ்வார்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பாளையங்கோட்டை சிறை வார்டன் பரிதாபமாக இறந்தார். மேலும் அவருடைய மனைவி, குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-09-23 21:30 GMT
கடையம், 


நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள முதலியார்பட்டி மார்க் தெருவை சேர்ந்தவர் இம்மானுவேல் மகன் பிரகாஷ் (வயது 28). இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராகினி. இவர்களுக்கு ரெக்சிதா (2) என்ற பெண் குழந்தை உண்டு. இந்த நிலையில் நேற்று மாலை பிரகாஷ் தன்னுடைய மனைவி ராகினி, குழந்தை ரெக்சிதா ஆகியோருடன் முதலியார்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள அகஸ்தியர் மடம் பக்கத்தில் சென்ற போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் கீழஆம்பூர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் வந்தார். கண்இமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரகாஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறை வார்டன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்