எல்லா சாதி, மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும் - நாராயணசாமி வேண்டுகோள்

எல்லா சாதி, மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2018-09-24 00:00 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் மூலம் புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களது பதவியேற்பு விழா கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது.

விழாவுக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் லட்சுமிகாந்தன், காளித்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேல்முருகன் வரவேற்று பேசினார்.

விழாவில் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

காங்கிரஸ் கட்சியின் தலைவரான பின் கட்சியை வளர்க்க ராகுல்காந்தி அயராது பாடுபட்டு வருகிறார். நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கிறார். கடந்த தேர்தலின்போது வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்து ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் போடுவேன் என்று பிரசாரம் செய்து மோடி பிரதமரானார். ஆனால் இதுவரை 15 காசுகூட ஒருவர் வங்கி கணக்கிலும் விழவில்லை.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்றார். அப்படி பார்த்தால் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கவேண்டும். அதுவும் நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் எந்த பலனும் ஏற்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் உடனடியாக போராட்டம் நடத்தும் பாரதீய ஜனதா இப்போது நாள்தோறும் விலையை உயர்த்தி வருகிறது. வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரித்து அதை லிட்டர் ரூ.34–க்கு வெளிநாட்டிற்கு விற்பனை செய்கிறார்கள். ஆனால் சொந்த நாட்டு மக்களுக்கு ரூ.85–க்கு விற்கிறார்கள்.

ரபேல் போர் விமானம் வாங்க காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விமானம் ஒன்றுக்கு ரூ.567 கோடி என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இவர்கள் ரூ.1,670 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு ரூ.41 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். இதை பிரான்சு முன்னாள் அதிபர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு தயாராக இல்லை. இதற்கு மோடி பதில் அளிக்காதது ஏன்?

ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதுதான் நமது குறிக்கோள். அவர் வந்தால்தான் நாட்டிற்கு விடிவு காலம். நாம் தலைவர்களை கைதட்டி ஊக்குவிக்கிலாம். காங்கிரஸ் கட்சிக்கு மதம், இனம், சாதி போன்ற பிரிவுகள் கிடையாது. எல்லா சாதி, மதத்தினரையும் அரவணைத்து செல்லவேண்டும். ராகுல்காந்தி எல்லா இன மக்களுக்கும் குரல் கொடுக்கிறார். நம்மிடையே ஒற்றுமை வேண்டும். காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்குத்தான் அனைவரும் பாடுபட வேண்டும்.

காங்கிரஸ் கட்சி மக்களின் நலனுக்கான கட்சி. இங்கு ராகுல்காந்திதான் ஹீரோ. அவர் இல்லாவிட்டால் நாமெல்லாம் ஜீரோ. புதுவையை பிடித்த சனியன் வெளியேற ராகுல்காந்தி பிரதமராக வேண்டும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

மேலும் செய்திகள்