குமாரபாளையம் அருகே கார்- லாரி மோதல்: என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலி

குமாரபாளையம் அருகே காரும், தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2018-09-23 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகரில் வசிப்பவர் சித்துராஜ். இவருடைய மகன் சரவணன் (வயது 21). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.இ. (சிவில்) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் வேலு மகன் சந்தோஷ் (21). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. (சிவில்) மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 2 பேரும் நண்பர்கள். கல்லூரி மாணவர்கள் 2 பேரும் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தனர். நேற்று மதியம் 1.30 மணியளவில் வெப்படை அருகில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு 2 பேரும் காரில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

குமாரபாளையம் அருகே உள்ள காவடியான்காடு வி.ஐ.பி. நகர் அருகே வந்தபோது எதிரே தண்ணீர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சரவணனும், சந்தோசும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தை திருச்செங்கோடு துணை சூப்பிரண்டு சண்முகம் பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே இடத்தில் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்