வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கல்லூரிகளில் கூடுதலான சிறப்பு முகாம் நடத்த உத்தரவு

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கல்லூரிகளில் கூடுதலான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேசன் காசிராஜன் உத்தரவிட்டார்.;

Update: 2018-09-23 22:00 GMT

விருதுநகர்,

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவஞானம் முன்னிலையில் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை தாங்கிய வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேசன் காசிராஜன் அப்போது கூறியதாவது:–

கடந்த 1–ந் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், மாவட்டத்திலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 53 ஆயிரத்து 662 ஆகும். இதில், தற்போது இறந்த, இடம் பெயர்ந்த மற்றும் இரட்டைப் பதிவுள்ள வாக்காளர் பெயர்கள் இருந்தால், அதனை கண்டறிந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை பட்டியலில் பெருமளவு இடம்பெறச் செய்ய மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இன்னும் கூடுதலாக சிறப்பு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டியலில் தகவல்கள் ஏதேனும் தவறாக இடம் பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று படிவம் 8– ஐ வழங்கி, சரியான விவரங்களை பூர்த்தி செய்து, படிவத்தின் மேல் பகுதியில் என்ன வகையான மாற்றம் என தெளிவாக குறிப்பிட்டு படிவத்தினை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்