காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும், கலெக்டர் வேண்டுகோள்

காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-23 21:45 GMT

சிவகங்கை,

இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

 வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. டெங்கு, சிக்குன்குனியா உள்பட அனைத்து வகை காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் வராமல் தடுக்க காய்ச்சல் கண்காணிப்பு பணி, கொசுப்புழு ஒழிப்பு, கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீடுகளை சுற்றியுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, டீ கப், உடைந்த மண் பானைகள், டயர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இவைகளில் மழைநீர் தேங்குவதன் மூலம் கொசுக்கள் உருவாகி நோய் தாக்குதல் ஏற்படும். அத்துடன் வீடுகளில் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். சிமெண்டு தொட்டிகளை வாரம் ஒரு முறை நன்றாக கழுவி காயவைத்து பின்னர் நீரை சேமித்து வைக்க வேண்டும்.

குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு வரும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்புறம் உள்ள டிரேயை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல் அறிகுறி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

வீட்டை சுற்றிலும் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேங்கும் நீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மேலும் செய்திகள்