கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயி தற்கொலை பயிர்கள் கருகியதால் வி‌ஷம் குடித்தார்

நாகை அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் பயிர்கள் கருகின. இதனால் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2018-09-23 23:00 GMT
வேளாங்கண்ணி,

கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு போதிய அளவு நீர் வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 19–ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டத்தின் கல்லணையை அடைந்து அங்கிருந்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ஜூலை மாதம் 22–ந் தேதி திறந்து விடப்பட்டது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத வகையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால்

மேட்டூர் அணை இந்த ஆண்டு 4 முறை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.


இருப்பினும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியில் உள்ள வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாததால் கடைமடை பகுதியில் உள்ள குளங்களுக்கு போதிய அளவு நீர் வந்து சேரவில்லை. இதனால் கடைமடை பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நாகை மாவட்டத்தின் வேதாரண்யம் அருகே உள்ள தாணிக்ககோட்டகம், வாய்மேடு, தகட்டூர், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கரியாப்பட்டினம், தென்னம்புலம், குரவப்புலம், தலைஞாயிறு, மணக்குடி, உம்பளச்சேரி, அவுரிக்காடு உள்பட பல்வேறு இடங்களில் குளங்கள் நிரம்பாமல் சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சோகம் தீரும் முன்பே தற்போது மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்தது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தலையாமழை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது48). விவசாயியான இவர் குத்தகைக்கு நிலம் எடுத்து நெல் சாகுபடி செய்து வந்தார். இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான தலையாமழை பகுதிக்கு வந்து சேரவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகின. இந்தநிலையில் கருகிய நெற்பயிர்களை கண்டு மனமுடைந்த ராமமூர்த்தி கலக்கத்தில் செய்வதறியாது திகைத்து கடந்த சில நாட்களுக்கு முன் பூச்சி மருந்தை (வி‌ஷம்) குடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார். வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த ராமமூர்த்திக்கு, ரேவதி என்ற மனைவியும் கருணாகரன், கதிர்வேல் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் விவசாயி ஒருவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்