மண்டபத்தில் த.மு.மு.க.–ம.ம.க. புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் அடி–தடி ஒருவர் காயம்; 8 பேர் மீது வழக்கு

மண்டபத்தில் நடைபெற்ற த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் நடந்த அடி–தடியில் ஒருவர் காயமடைந்தார். இதுதொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-09-23 23:30 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான மகாலில் த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. மண்டபத்தை சேர்ந்த த.மு.மு.க. நிர்வாகி சாகுல் ஹமீது என்பவரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் கலந்துகொள்ள அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.

இதன்படி வேறு யாரும் மகாலுக்கு வராதபடி முன்பகுதி கேட் பூட்டப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் சாதிக் பாட்சா கலந்து கொண்டார். இந்த நிலையில் சக்கரக்கோட்டையை சேர்ந்த அன்வர் அலி என்பவர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார். ஏற்கனவே இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்ள முயன்ற அன்வர் அலியுடன் வந்த 8 பேர் உள்ளே புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் தாக்கியதில் முன்னாள் நிர்வாகி அம்சத்கான் காயமடைந்தார். உடனடியாக அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மண்டபம் த.மு.மு.க. நிர்வாகி சாகுல்ஹமீது போலீசில் புகார் செய்தார்.

அதில் அன்வர் அலியுடன் வந்த நபர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை தரக்குறைவாக பேசியதுடன் ரூ.50,000–த்தை எடுத்துச்சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் சக்கரக்கோட்டையை சேர்ந்த அன்வர் அலி, ராமநாதபுரம் பரக்கத்துல்லா, அப்துல் ரகுமான், மன்சூர், நசீர், ஜகாங்கீர், யூசுப், அன்சர் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல அம்சத்கான் அளித்த புகாரின் பேரில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்