சாலைகளை சீரமைக்கும் தாதா

சாலை விபத்தில் இறந்த மகனின் நினைவாக குண்டும், குழியுமாக கிடக்கும் சாலைகளை செப்பனிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார், தாதாராவ் பில்ஹோரே.

Update: 2018-09-23 09:11 GMT
சாலை விபத்தில் இறந்த மகனின் நினைவாக குண்டும், குழியுமாக கிடக்கும் சாலைகளை செப்பனிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார், தாதாராவ் பில்ஹோரே. 48 வயதாகும் இவர், மும்பையை அடுத்த ஹோர்கான் பகுதியை சேர்ந்தவர். இவருடைய மகன் பிரகாஷ் பில்ஹோரே 16 வயதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அப்போது கன மழை பெய் திருக்கிறது. அவர் பயணித்த சாலை குண்டும், குழியுமாக இருந்திருக்கிறது.

அதில் மழை வெள்ளம் தேங்கி நின்றுள்ளது. அதனை கவனிக்காமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதால், விபத்தில் சிக்கிவிட்டார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்திருக்கிறார்கள். எனினும் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் உயிரிழந்துவிட்டார்.

மகனின் எதிர்பாராத இறப்பு தாதாராவை நிலைகுலைய செய்துவிட்டது. மகனின் இழப்பு ஏற்படுத்திய துக்கத்தில் இருந்து மீள்வதற்காக, விபத்துக்கு காரணமான சாலைக்கு சென்று அங்கு காணப்பட்ட பள்ளங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அது அவருக்கு ஆறுதலாக அமைய, மற்ற பகுதிகளிலும் பழுதாகி கிடக்கும் சாலைகளை செப்பனிடும் பணியில் ஈடுபடுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைத்து இருக்கிறார்.

அதனால் தாதாராவ், ‘மும்பையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் தாதா’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்