காவலர் தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்துவதில் அமைச்சரவையின் முடிவை கவர்னர் நிராகரிக்க கூடாது - முன்னான் எம்.பி. ராமதாஸ்

காவலர் தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்துவதில் அமைச்சரவையின் முடிவை கவர்னர் நிராகரிக்கக்கூடாது என முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.;

Update: 2018-09-22 23:45 GMT

புதுச்சேரி,

 புதுச்சேரி முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவை காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள காவலர்களின் வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற அமைச்சரவையின் வேண்டுகோளை கவர்னர் நிராகரித்து இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த பிரச்சினையில் கவர்னர் பொதுநோக்கத்தோடு ஆராய்ந்து இருந்தால் வேலையில்லாமல் வாடி வரும் இளைஞர்களை திருப்பதிப்படுத்தி இருக்க முடியும். ஆனால் மாறாக ஒரு தத்துவ முறையை மேற்கொண்டு ஒரு நிரந்தர கொள்கையை மாற்ற முடியாது என்ற நிலையை எடுத்துள்ளார். பல வேற்றுமைகள் கொண்ட இந்தியாவில் எந்த ஒரு கொள்கையும் அல்லது சட்டமும் நிரந்தமாக இருக்க முடியாது.

ஒரு நல்ல நிர்வாகி மாற்றங்களுக்கு மதிப்பு அளிப்பவராக இருக்க வேண்டும். அகில இந்திய காவல்துறை சீர்திருத்தக்குழு எப்போதோ உருவாக்கிய நியமன விதிகள் எல்லா காலத்திற்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்துவதாக, நிலையானதாக இருக்க முடியாது. காவலர்களுக்கான நிலையான வயது வரம்பு எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை என்று கூறப்படுகிறது. அது ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் வேலையின்மை அளவு, நிதிநிலை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது. புதுச்சேரியில்கூட இந்த நியமன விதிகள் ஒரே மாதிரியாக எல்லா காலத்திலும் இருந்தது இல்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வயது வரம்பு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தற்போது வயது வரம்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் தவறுதலால் ஏற்பட்டதுதான். காவலர் பணிய இடங்களில் காலியாகும் போதெல்லாம் உடனுக்குடன் நியமனம் செய்திருந்தால் அந்த வயதிற்கு உரியவர்கள் அப்போதே நியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள். அப்போது அவர்கள் அதிகபட்ச வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்க மாட்டார்கள். அரசு செய்த தவறுக்காக வேலை இல்லாத இளைஞர்கள் தண்டிக்கப்படக்கூடாது.

வயது வரம்பை தளத்துவது என்பது வேலைவாய்ப்பை பெறுவதில் இருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும். வயதை உயர்த்துவதால் மனமுதிர்ச்சி உள்ள இளைஞர்கள் காவல் பணியில் சேர்வார்கள். இதனால் காவல்துறை சேவையின் தரம் உயரும். இந்த பிரச்சினை உள்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் அது அமைச்சரவையின் முடிவை ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவேதான் போலீஸ் டி.ஜி.பி.யும், தலைமை செயலாளரும் அமைச்சரவையின் முடிவை ஏற்று கோப்பினை கவர்னருக்கு அனுப்பி உள்ளனர். அமைச்சரவையின் முடிவை நிராகரித்து கவர்னர் புதுவையின் ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கக்கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்