கருவடிக்குப்பத்தில் மதுபான, சாராயக் கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

கருவடிக்குப்பத்தில் மதுபான, சாராயக்கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-09-22 23:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட கருவடிக்குப்பம் பகுதியில் சித்தானந்தா கோவில், வெக்காளியம்மன் கோவில், பாத்திமா மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, ஆல்பா பள்ளி மற்றும் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளன.

கருவடிக்குப்பம் சாலையில் சுடுகாட்டிற்கு எதிரே மதுபானக்கடை, சாராயக்கடை, கள்ளுக்கடை அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு வருபவர்களால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. பெண்கள் நடமாட அச்சம் அடைகின்றனர். பள்ளி மாணவ–மாணவிகள் அந்த வழியாக செல்லும்போது அச்சத்துடன் செல்கின்றனர். எனவே அந்த கடைகளை அகற்ற வேண்டும், புதிதாக மதுபானக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கருவடிக்குப்பம் மதுபான கடைகளுக்கான எதிர்ப்பு குழு சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பின்னர் கவர்னர், சபாநாயகர், முதல்–அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கருவடிக்குப்பம் மதுபான கடைகளுக்கான எதிர்ப்பு குழு சார்பில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் லெனின் துரை தலைமை தாங்கினார். இதில் சாமிபிள்ளை தோட்டம், ஜெயராஜ் நகர், கென்னடி கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள மதுபானகடைகள், சாராயக்கடைகளை அகற்ற வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்