47 ஆண்டுகள் மராமத்து நடைபெறாத பாசன வாய்க்காலை தூர் வாரிய விவசாயிகள்

47 ஆண்டுகள் மராமத்து பணிகள் நடைபெறாத பாசன வாய்க்காலை விவசாயிகளே தூர்வாரினர்.

Update: 2018-09-22 22:45 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்தது பெரப்பன்சோலை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பெரப்பன்சோலை அணைக்கட்டு ஆற்று பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது.

கொல்லிமலை அடிவாரத்தில் சுவேதா நதியில் இருந்து வரும் தண்ணீர் பெரப்பன்சோலை அணைக்கட்டு ஆற்று பாசன வாய்க்கால் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பெரப்பன்சோலை அருகேயுள்ள சாலக்காடு என்ற இடத்தில் தொடங்கி சேலம் மாவட்டம் புதுமாவாடு என்ற இடத்தில் இந்த வாய்க்கால் முடிவடைகிறது.

இந்த வாய்க்கால் சுமார் 6½ கி.மீ. நீளம், 3 மீட்டர் அகலம், 3 மீட்டர் ஆழம் கொண்டது. இதன்மூலம் 396 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் இருக்கும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த பாசன வாய்க்காலில் தண்ணீர் வந்துள்ளது. அதன்பிறகு தண்ணீர் வரவில்லை.

இதனால் வாய்க்கால் கடந்த 47 ஆண்டுகளாக மராமத்து பணியான தூர்வாரப்படாமல் செடி,கொடிகள், முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டது. இந்த பாசன வாய்க்காலை தூர்வாரி விவசாயத்திற்கு பயன்படும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பொதுப்பணித்துறையினர், கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் கூறினர்.

அரசு நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், இப்பகுதி விவசாயிகளே இந்த வாய்க்காலை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி தற்போது 65-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என விவசாயிகள் கடந்த 10 நாட்களாக பெரப்பன்சோலை அணைக்கட்டு ஆற்று பாசன வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது பணி முடிவடையும் நிலையில் உள்ளது. வாய்க்காலில் சில இடங்களில் மட்டுமே தூர்வாரும் பணி நடக்க வேண்டி உள்ளது. அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நமக்கு நாமே திட்டம் போல் விவசாயிகள் தாமாகவே முன்வந்து வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டது சுற்றுவட்டார கிராம விவசாயிகளுக்கும் தூண்டுகோலாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்