11 ஆயிரம் நெல் மூடைகள் மாயமான விவகாரம் குடோன் உரிமையாளர் கைது

காரைக்குடி அருகே குடோன்களில் வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரம் நெல் மூடைகள் மாயமான வழக்கில் குடோன் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-09-22 22:15 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 2 குடோன்கள் புதுவயலில் உள்ளன. இந்த குடோனில் சென்னையை தலைமையிடமாக கொண்ட தனியார் அரிசி விற்பனை நிறுவனத்தின் 13 ஆயிரத்து 855 நெல் மூடைகளை வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் அந்த நிறுவனத்திற்கு தெரியாமல் 10 ஆயிரத்து 895 நெல் மூடைகள் மாயமாகிவிட்டன. இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மேலாளருக்கு தெரியவரவே, அவர் நெல் மூடைகள் திருடுபோனது குறித்து சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த நெல்மூடைகள் பல்வேறு கட்டங்களாக மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குடோன் உரிமையாளரான செந்தில்குமாரை கைது செய்து போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்