தனியார் கம்பெனியில் செம்பு கம்பிகள் திருடிய வழக்கில் 6 பேர் கைது
குன்றத்தூர் அருகே தனியார் கம்பெனியில் செம்பு கம்பிகள் திருடிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
கிண்டியை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் அப்துல் (வயது 40). குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் வயர்களில் இருந்து செம்பு மற்றும் அலுமினியங்களை தனியாக பிரித்து எடுக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இதில் 5-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது கம்பெனியின் கதவை உடைத்து அதற்குள் இருந்த செம்பு கம்பிகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் கம்பெனிக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கேளம்பாக்கத்தில் காயலான் கடை நடத்தி வந்த ஜான்ராஜ் (27), மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த டேக் பகதூர் சட்டர்ஜி (23), அனில் (22), அப்தர் அலி (23), பிஜூல் மோரன் (22), தன் போரா(21) உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஜான்ராஜ் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
ஜான்ராஜ் கேளம்பாக்கத்தில் காயலான் கடை நடத்தி வருகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை படூர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார். பழைய பொருட்களை எடுப்பது போல் தனியார் கம்பெனிகளுக்கு சென்று அங்கு கொள்ளை அடிப்பதற்கு ஏற்றவாறு பொருட்கள் உள்ளதா என்று பார்த்து கொள்வார். அதன் பிறகு எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்.
இதையடுத்து 5 பேரும் அங்கு சென்று பொருட்களை கொள்ளையடித்து கொண்டு வந்து ஜான்ராஜிடம் கொடுத்து விடுவார்கள். அவர் அதனை விற்று பணமாக மாற்றி இவர்களுக்கு ஒரு பகுதியை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து ஒரு வேன் மற்றும் 600 கிலோ செம்பு கம்பிகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.