இந்திய அளவில் ஊழலை தி.மு.க.வினர் தான் அறிமுகப்படுத்தினார்கள் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
இந்திய அளவில் ஊழலை தி.மு.க.வினர் அறிமுகப்படுத்தினார்கள் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
அம்மாபேட்டை,
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி மற்றும் ஆலோசனை கூட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சரவணபவா தலைமை தாங்கினார். முன்னாள் எம்பி. என்.ஆர்.கோவிந்தராஜர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க. ஊழல் ஆட்சி செய்து வருவதாக தொடர்ந்து தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். அதே போல் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் செய்ததாக கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் ஜெயலலிதா எந்த குற்றமும் செய்யவில்லை. தி.மு.க.வினரின் வஞ்சக வலையில் சிக்கி சிறைக்கு சென்றார். அவர் உயிருடன் இருந்திருந்தால் தான் நிரபராதி என்பதை நிரூபித்திருப்பார்.
இந்திய அளவில் ஊழலை அறிமுகப்படுத்தியதே தி.மு.க.வினர் தான். ஸ்பெக்ட்ரம், சர்க்காரியா போன்ற பல்வேறு மிகப்பெரிய ஊழல்களை செய்துள்ளனர். எனவே நாம் யாரை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும். மேலே இறைவன் ஒருவன் பார்த்து கொண்டிருக்கிறான். தப்பு செய்வது யார் எனன்பது அவனுக்கு தெரியும். அவனுடைய தண்டனையில் இருந்து யாரும் தப்பமுடியாது.
ஜெயலலிதா கூறியதுபோல அவரது இறப்பிற்கு பிறகும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் ஆட்சி செய்வது உறுதி. எனவே அ.தி.மு.க.வினர் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அந்தந்த பகுதி பொதுமக்களின் சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். எதிர் கட்சியினரே நமது செயலை கண்டு நமக்கு வாக்களிப்பார்கள்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.