‘மனித கால்குலேட்டர்’ பிரியன்ஷி!
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பிரியன்ஷி சோமானியை, ‘நடமாடும் மனித கால்கு லேட்டர்’ என்கிறார்கள். அதற்கேற்ப எந்தக் கடினமான கணிதப் புதிரைக் கூறினாலும் மனக் கணக்குப் போட்டு, சில நிமிடங்களில் விடை கூறிவிடுகிறார்.
இரு சிறு எண்களைக் கூட்டுவதற்குக் கூட கால்குலேட்டரை தேடுவோருக்கு, பிரியன் ஷியின் கதை பிரமிப்பை ஏற்படுத்தும்.
இந்த 20 வயது இளம் பெண்ணுக்கு சிறுவயதிலேயே எண்கள் மீது பிரியம் உண்டாகி விட்டது. அதைப் புரிந்து கொண்ட பிரியன்ஷியின் பெற்றோர் சத்யன்- அஞ்சு, அவரை 6 வயதில் அபாகஸ் வகுப்பில் சேர்த்துவிட்டனர். எரியும் தீபத்தை மேலும் தூண்டிவிட்டது போலானது அது.
2006-ல் தனது 7 வயதிலேயே அபாகஸ் மற்றும் மனக் கணக்குப் போட்டியில் தேசிய சாம்பியனாகிவிட்டார் பிரியன்ஷி. தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு அந்தப் பட்டத்தைத் தக்கவைத்தார்.
தேசிய அளவில் மட்டுமின்றி, 2007-ம் ஆண்டில் மலேசி யாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியிலும் வென்று சாம்பியன் ஆனார் பிரியன்ஷி.
தனது வெற்றி எதிலும் திருப்தி அடைந்துவிடாமல், அடுத் தடுத்த இலக்குகளை நோக்கி அவர் முன்னேறிக் கொண்டே இருந்தார்.
2010-ல் ஜெர்மனியில் நடைபெற்ற மனக் கணக்கு உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற பிரியன்ஷி, அதன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மிக இளவயதுப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
16 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வயதுடைய 37 கணிதப் புலிகள் பங்கேற்ற அப்போட்டியில், தன்னைவிட மூத்தவர்கள் பலரையும் வீழ்த்தி மூக்கில் விரல் வைக்க வைத்தார் பிரியன்ஷி.
இறுதிப் போட்டியில், 6 முதல் 8 இலக்க எண்களின் வர்க்க மூலத்தை 6.57 நிமிடங்களில் மனக் கணக்கிட்டுக் கூறி அசத்தினார். தொடர்ந்து, 10 இலக்க எண்கள் 10-ஐ கூட்டியு ம், 8 இலக்கங்கள் கொண்ட இரு எண்களை பெருக்கியும் கூறினார். 10 எண்களுக்கான வர்க்க மூலங்களை 6.28 நிமிடங்களில் கூறி சக போட்டியாளர்களையே திகைக்க வைத்தார்.
இதுவரையிலான மனக் கணக்கு உலகக் கோப்பை போட்டிகளிலேயே கூட்டல், பெருக்கல் மற்றும் வர்க்க மூலம் கண்டுபிடித்தலில் நூறு சதவீதம் துல்லியமாக விடை கூறியவர் பிரியன்ஷிதான்.
மனக் கணக்கில் வர்க்க மூலம் கண்டுபிடிப்பதில் கடந்த 2012-ம் ஆண்டு புதிய உலக சாதனை படைத்தார் இவர். பத்து 6 இலக்க எண்களின் வர்க்க மூலங்களை மனக் கணக் கிட்டுச் சொல்ல பிரியன்ஷி எடுத்துக்கொண்ட நேரம் 2:43:05 நிமிடங்களே.
பிரியன்ஷியின் மனக் கணக்குத் திறமைக்கு உரிய அங்கீ காரமாக, 2011-ம் ஆண்டு உலக கணித நாள் நிகழ்வுக்கான இந்தியத் தூதராக அவரை மத்திய அரசு அறிவித்தது.
2014 கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் மனத்திறன் மற்றும் நினைவாற்றல் பிரிவில் பிரியன்ஷி இடம்பிடித்தார். லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இவரது பெயர் இடம்பெற்றது.
கணிதத்தில் இந்தியர்கள் வல்லவர்கள் என்பதை உலகெ ங்கும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார், பிரியன்ஷி சோமானி.
‘‘உங்களுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ, அதில் தீவிரப் பற்றுக்கொண்டு செயல்பட்டால் நாளடைவில் அது மிகவும் எளிதாகிவிடும். ஆரம்பத்தில் கடினமாக உழைத்தால், பின்னால் வெற்றிகள் தன்னால் வரும்!’’
என்று பிரியன்ஷி பகிர்ந்துகொள்ளும் வெற்றி ரகசியம், சாதிக்க விரும்புவோர் அனைவரும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டியது!