ரெயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை: கலெக்டர் நேரில் ஆய்வு

அரக்கோணம் அருகே மோசூர் பகுதியில் ரெயில்வேகேட் உள்ள இடத்தில் பொதுமக்கள் வசதிக்காக ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-09-21 22:34 GMT
அரக்கோணம்,

அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில்பாதையை ஒட்டி மோசூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி செய்யூர், அவினாசிகண்டிகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் வேலைநிமித்தமாக வேலூர், சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் வெளியூர்களுக்கு சென்று படிக்கின்றனர். இங்கு ரெயில்வே கேட்டை வாகனங்கள் கடப்பதற்கு வசதியாக ரெயில்வே கேட் உள்ளது. ஆனால் தினமும் இந்த வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும், சரக்கு ரெயில்களும் இருமார்க்கத்திலும் மின்னல் வேகத்தில் செல்வதால் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் ரெயில்வே கேட் திறக்கப்படும் வரை மணிக்கணக்கில் வாகனங்கள் நிற்பதால் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மோசூர் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. சு.ரவியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ. பேசி வந்தார். மேலும் இது தொடர்பாக தமிழக முதல் -அமைச்சர், ரெயில்வே கோட்ட மேலாளர், தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆகியோரிடமும் அவர் மனு அளித்தார்.

இந்த நிலையில் மோசூர் ரெயில்வே கேட் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5½ மீட்டர் உயரம், 7½ மீட்டர் அகலம், 717 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் மோசூருக்கு வந்தார். அவர் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ள இடத்தை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை செல்லும் சுற்றுவட்ட ரெயில்பாதையில் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் அருகில் ரெயில்வே கேட் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. ரெயில்வே கேட் அமைக்கப்பட உள்ள நெடுஞ்சாலையை கலெக்டர் ராமன், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சு.ரவி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் கல்லாறு பகுதியில் தமிழக அரசு சார்பில் ரூ.6 கோடியே 49 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலம் கட்ட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள், கட்டுமான பொருட்களை பார்வையிட்ட கலெக்டர் ராமன் நெடுஞ்சாலை துறை பொறியாளர்களிடம் உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் குறைகளை சுட்டிக்காட்டி சரிசெய்ய உத்தரவிட்டார்.

ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறுகையில், “அரக்கோணம் தொகுதியில் நடந்து வரும் சாலை பணிகள், உயர்மட்ட மேம்பால பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. கல்லாறு பகுதியில் உயர்மட்ட மேம்பால பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மேலும் பணிகளை துரிதபடுத்த உத்தரவிட்டு உள்ளேன். வரும் மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு உயர்மட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என்றார்.

ஆய்வின்போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், தாசில்தார் பாபு, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் எஸ்.எஸ்.சரவணன், நெடுஞ்சாலை துறை திட்டங்கள் கோட்ட பொறியாளர் வி.சீனிவாசன், உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ராஜகாந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் மற்றும் ரெயில்வே பொறியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்