ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் உதவியுடன் ஆனைக்குட்டம் கண்மாய் தூர்வாரும் பணி தொடக்கம்
ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் உதவியுடன் சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் கண்மாயை தூர்வாரும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.;
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டத்தில் கடம்பன்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் தேங்கும் நீரை கொண்டு அந்த பகுதியில் உள்ள 400–க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், பயிறு, பருத்தி ஆகிய பயிர்களை பயிரிட்டு வந்தனர். ஆண்டு தோறும் நிரம்பும் இந்த கண்மாயில் இருந்து தான் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருவது இந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் வழக்கம். எம்.புதுப்பட்டி அருகில் உள்ள காளையார்குறிச்சியில் கண்மாயில் இருந்து கடம்பன்குளம் கண்மாயிக்கு நீர்வரத்து பாதை உள்ளது. இந்த நிலையில் இந்த நீர் வரத்து பாதையில் அதிகளவில் செடி,மரங்கள் வளர்ந்து நீர்வரத்து பாதையை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் வரும் காலங்களில் இந்த கண்மாயிக்கு எந்த தடையும் இல்லாமல் மழை தண்ணீர் வரும் என்று அந்த கிராம மக்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த கண்மாயை தூர்வார வேண்டும் என்ற அந்த பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடம்பன்குளம் கண்மாயை தூர்வார தேவையான நிதி உதவியை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் செய்ய முன் வந்தனர். நம்மால் முடியும் என்ற அமைப்பை நடத்தி வரும் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீவி நகர் வளர்ச்சி இயக்க நிர்வாகிககளை தொடர்பு கொண்டு ஆனைக்குட்டம் கடம்பன்குளம் கண்மாயை தூர்வார தேவையான உதவிகளை செய்ய கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் தூர்வாரும் பணி நேற்று காலை தொடங்கியது.
இந்த நிலையில் ஸ்ரீவி நகர் வளர்ச்சி இயக்க தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். சிவகாசி தாசில்தார் பரமானந்த ராஜா முன்னிலை வகித்தார். சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் கலந்து கொண்டு தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,
இந்த கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் நலன் கருதி வெளிநாட்டு தமிழர்களின் உதவியுடன் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி நடைபெற கிராம மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை தாசில்தார் சந்திரசேகர், சிவகாசி மண்டல தாசில்தார் செந்தில்வேல், கிராம மக்கள் சார்பில் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜ் ஆகியோர் பேசினார்.