மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2018-09-19 22:30 GMT

மதுரை,

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள், கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளது என்பதை அந்தந்த மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அந்த ஆய்வில் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று கேட்டறிய வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையை மாவட்ட நீதிபதிகள் செப்டம்பர் மாதம் 30–ந் தேதிக்குள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்அடிப்படையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று மாலை மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமாபானு, தலைமை குற்றவியல் நீதிபதி சத்யமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கோவிலுக்குள் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தரிசனம் செய்யும் முறை, கட்டண விவரங்கள், பிரசாதம் செய்யும் இடம், தீயினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு தகவல்கள் குறித்து கோவில் இணை கமி‌ஷனர் நடராஜனிடம் கேட்டறிந்தனர். இது தவிர பக்தர்களிடம் கோவிலுக்குள் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும், அவர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா என்பதையும் கேட்டறிந்தனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்ய வந்துள்ளோம். கோவிலில் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டோம். அதில் கோவில் முழுவதும் சுத்தமாக உள்ளது. பக்தர்களுக்கு கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து விசாரித்தோம். அதில் கழிப்பறை வசதிகள் கோவிலுக்குள் இல்லை என்பது தெரியவந்தது. ஆகம விதிப்படி கோவிலுக்குள் கழிப்பறை வைக்க கூடாது என்பதால் சித்திரை வீதிகளில் கழிப்பறை வசதி உள்ளது என்றும், அதுவும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் தெரியவந்தது. இது குறித்து இணை கமி‌ஷனரிடம் கேட்டோம். அப்போது அவர் சித்திரை வீதிகளில் உள்ள கழிப்பறைகளை கோவில் நிர்வாகமே பராமரித்து பக்தர்கள் இலவசமாக பயன்படுத்துவது குறித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்தார். பக்தர்களுக்காக 4 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.

இது தவிர பசு மாடுகள் உள்ள கோசாலையை ஆய்வு செய்தோம். அங்கு தூய்மையாக இருந்தது. மேலும் அந்த பசுகள் மூலம் கிடைக்கும் பாலை 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவில் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச தரிசனம், கட்டண தரிசனம் குறித்து ஆய்வு செய்தோம். இதில் கட்டண தரிசன டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு டிக்கெட்டுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட்டுகளில் பார்கோடு வசதி உள்ளதால் அதில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்தது.

முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்கு வசதியாக 50 வீல்சேர்கள், 2 பேட்டரி கார்கள் உள்ளது. தேவைபடுவோர்கள் போன் செய்தால் அந்த இடத்திற்கு உடனே பேட்டரி கார் மற்றும் வீல்சேர்கள் கொண்டு வரப்படுகின்றன. பாதுகாப்பு வசதிகள் குறித்து பார்க்கும் போது கோவில் உள்ளே, வெளியே என 74 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, அதனை போலீசாரும், கோவில் நிர்வாகமும் கண்காணித்து வருகிறார்கள்.

தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளும் தகவல்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. குங்குமம் மற்றும் பிரசாதங்கள் தயாரிக்கும் இடங்களை பார்வையிட்டோம். குறிப்பாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தோம். அங்கு ஆகம விதிகளின்படி சீரமைப்பு பணிகள் நடந்து வருதை கேட்டறிந்தோம். மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவிலை போன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்பட மொத்தம் 18 கோவில்களை ஆய்வு செய்ய உள்ளோம். அங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் ஐகோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்