காவலர் பணிக்கான வயதுவரம்பு: கவர்னர் முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தல்

காவலர் பணிக்கான வயது வரம்பு வி‌ஷயத்தில் கவர்னர் கிரண்பெடி தனது முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.;

Update: 2018-09-19 00:06 GMT

புதுச்சேரி,

புதுவை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வயது வரம்பினை 22–ல் இருந்து 24 ஆக உயர்த்த வேண்டும் என்று புதுவை அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்தது. அரசின் பரிந்துரைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் பரவின. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. தொடர்ந்து 22 வயதே நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில செயற்குழு கூட்டம் வருகிற 21–ந்தேதி காரைக்காலில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேசிய செயலாளர் மகேஷ்கிரி, தென்மண்டல அமைப்பு செயலாளர் சந்தோஷ்ஜி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். பெட்ரோல், டீசலுக்கான வரியை பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் குறைத்துள்ளனர். அதேபோல் புதுச்சேரியிலும் குறைக்கவேண்டும்.

புதுவையில் காவலர் பணிக்கான வயது வரம்பு 22 ஆக உள்ளது. என்ஜினீயரிங் படித்தவர்கள்கூட வேலையில்லாமல் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கின்றனர். எனவே வயதுவரம்பினை 24 ஆக உயர்த்தவேண்டும். இந்த வி‌ஷயத்தில் கவர்னர் தனது முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவராதது ஏன்? இப்போது வயதுவரம்பினை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சரை சந்திக்க முதல்–அமைச்சர் நாராயணசாமி எங்களை அணுகினால் நாங்களும் தயாராக உள்ளோம்.

காங்கிரஸ் கட்சியினர் இப்போது ரபேல் ஊழல் தொடர்பாக பேசிவருகின்றனர். இதில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை. ஊழலுக்காக தண்டனை பெற்றவர்கள் காங்கிரஸ் கட்சியில்தான் உள்ளனர். ரபேல் விமான ஊழல் என்று கூறிக்கொண்டு போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சி இதுதொடர்பாக ஏன் கோர்ட்டுக்கு போகவில்லை?

இதற்காக புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி தஞ்சாவூருக்கு சென்று போராட்டம் நடத்துகிறார். புதுவையில் எல்லா திட்டமும் தோல்வியடைந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

எங்களைப்பார்த்து டெபாசிட் வாங்காதவர்கள் என்று தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விமர்சித்துள்ளார். 8 ஆயிரம் ஓட்டு வாங்கிவிட்டால் பெரிய ஆட்களா? முன்பு பாராளுமன்ற தேர்தலின்போது பாரதீய ஜனதா கட்சி 1.75 லட்சம் ஓட்டு வாங்கியது. இந்த முறை மெகாகூட்டணியில் இருப்போம்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரிக்கு எப்போது வந்தாலும் கருப்புக்கொடி காட்டுவோம். நாங்கள் சுயநலத்துக்காக கட்சி நடத்தவில்லை.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்