காரைக்கால் துறைமுகம் மூலம் மணல் இறக்குமதி - கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி
காரைக்கால் துறைமுகம் மூலம் மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கட்டுமானத்திற்கான மணல் தட்டுப்பாடாக உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து ஆற்றுமணலை இறக்குமதி செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மணலை இறக்குமதி செய்தல், கொண்டு செல்லுதல் மற்றும் சேமித்து வைத்தல் விதிகள் உருவாக்கப்பட்டு புதுச்சேரி சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அது தனிநபர், நிறுவனம் ஒன்று வெளிநாடுகளில் இருந்து ஆற்றுமணலை இறக்குமதி செய்துகொள்வதற்கும் அதனை புதுச்சேரி ஒன்றிய ஆட்சிபரப்பில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கும் அனுமதிக்கிறது.
கட்டுமானத்திற்காக தேவைப்படும் மணலை இறக்குமதி செய்து விற்பனை செய்ய இறக்குமதி வணிகர் பதிவினை பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு இறக்குமதி, கனிமபொருள் வணிகராக பதிவு செய்ய விரும்பும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆற்று மணலை இறக்குமதி செய்வதற்கும், கனிமபொருள் வணிகருக்கும் தேவையான அரசிதழ் அறிவிக்கை மற்றும் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஆகியவை http://collectorate.py.gov.in என்ற இணையதள முகவரியில் தயாராக உள்ளது.
இந்த விண்ணப்பமானது உரியவாறு நிரப்பப்பட்டு ரூ.1000, மற்றும் ரூ.1 லட்சத்துக்கு, புதுச்சேரி வருவாய் மற்றும் மேலாண்மைத்துறை, சிறப்பு செயலர் (வருவாய்) என்னும் பெயரில் வரைவோலை அல்லது பணம் செலுத்துவதற்கான ஆணை எடுத்து அதனை விண்ணப்பத்துடன் இணைத்து தேவையான நகல்களுடன் புதுச்சேரி வருவாய் மற்றும் மேலாண்மை துறை செயலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை சிறப்பு செயலர் (வருவாய்), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இறக்குமதி செய்யப்படும் மணலை பெறுவதற்கு காரைக்கால் துறைமுகமானது எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து மணலை புதுச்சேரிக்கு இறக்குமதி செய்ய அரசு அனுமதிக்கும் நிலையில் மணல் தட்டுப்பாடு விரைவில் இல்லாமல் போகும். புதுச்சேரி ஒன்றிய ஆட்சிபரப்பில் மேம்பாட்டு பணிகளும் கட்டுமான பணிகளும் வேகம் பெறும் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.