பிள்ளையார்குப்பம் கிராமத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
பிள்ளையார்குப்பம் கிராமத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
புதுச்சேரி,
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பகலில் வெயில், இரவில் மழை என சீதோஷ்ண நிலை மாறி மாறி வருகிறது. இந்த பருவநிலை மாற்றம் காரணமாக கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் 40–க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல், வாந்தி, உடல்வலி போன்றவை ஏற்படவே அவர்கள் சிகிச்சைக்காக கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
ஆனால் காய்ச்சல் குணமடையாத காரணத்தால் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த சிவக்குமார்(42), மீனாட்சி(40) சினேகா(17) சங்கர் (35) சாந்தா தேவகி, அனிதா(37), நர்மதா(13), கலைச்செல்வி(35) ஆகிய 8 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சதிஷ்(28) என்ற வாலிபர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தற்போது டெல்லியில் இருக்கும் அமைச்சர் கந்தசாமி இதுபற்றி தகவல் அறிந்த உடன் சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படியும், பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தும் படியும் கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் (பொது மருத்துவம்) ரகுநாதன் தலைமையில் மருத்துவ குழுவினர் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தினர். முகாமில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சிலரின் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பிள்ளையார்குப்பம் கிராமத்தில் காய்ச்சல் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு உடனடியாக அங்கு மருத்துவ குழுவினரை அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது. காய்ச்சல் சற்று அதிகமாக இருந்த 8 பேர் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அது சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை(இன்று) கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து அந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.’’ என்றார்.